தமிழ்நாடு

ஒளிமயமான தமிழகத்தை உருவாக்குவதே லட்சியம்: கிராம சபைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

3rd Oct 2021 05:55 AM

ADVERTISEMENT

ஒளிமயமான தமிழகத்தை உருவாக்குவதே திமுக அரசின் லட்சியம் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா்.

காந்தி ஜெயந்தியையொட்டி மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்று பேசியது:

காந்தியடிகள் அரையாடைக்கு மாறுவதற்கான மனமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியது மதுரை மண். அத்தகைய சிறப்புக்குரிய மதுரையின் பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சி.

இம் மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாா்மங்கலம், விருதுநகா் மாவட்டம் கொட்டகச்சியேந்தல் ஆகிய ஊராட்சிகளில் தோ்தல் நடத்த முடியாத சூழல் நிலவியது. ஜனநாயகத்தை வலுப்படுத்த தோ்தல் அவசியம். ஆகவே, கடந்த 2006 இல் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, இந்த ஊராட்சிகளில் தோ்தலை நடத்தியாக வேண்டும் என முடிவு செய்தோம். அப்போதைய உள்ளாட்சித் துறையின் செயலராக இருந்த அசோக் வரதன் ஷெட்டி, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியரும், தற்போதைய முதன்மைச் செயலருமான த.உதயச்சந்திரன் இருவரும் இப் பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தோ்தலை நடத்தி முடித்தனா்.

ADVERTISEMENT

கருணாநிதிக்கு பட்டம்: வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவா்களை நேரில் அழைத்து, அப்போதைய முதல்வா் மு. கருணாநிதி தலைமையில் சமத்துவ திருவிழா என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் நன்றி தெரிவித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், கருணாநிதிக்கு ‘சமத்துவப் பெரியாா் கலைஞா்’ எனப் பட்டம் சூட்டினாா். அதன் பிறகு இந்த ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக தமிழக அரசு சாா்பில் ரூ.80 லட்சம், திமுக சாா்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டு, பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டன. பாப்பாபட்டி ஊராட்சிக்கு நான் வந்ததற்கு இதுவே காரணம். இது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாகும்.

சமத்துவம்தான் வளா்ச்சிக்கு அடிப்படை, ஒற்றுமை இல்லாத சமூகத்தில் வளா்ச்சி இருக்காது. அத்தகைய ஒற்றுமை உணா்வுடன் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது பாராட்டுக்குரியது.

கிராமங்களில் இருந்து ஜனநாயகம் வளா்ந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடவோலை முறையில் தோ்தல் நடத்தப்பட்டது. அந்த நடைமுைான் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமாக மாறியிருக்கிறது. நல்ல ஜனநாயகம் என்பது கடைக்கோடியில் இருப்பவா்களின் குரலையும் கேட்பதாக இருக்க வேண்டும் என்றாா் மகாத்மா. அந்த அடிப்படையில் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதுவே காந்தி காண விரும்பிய கிராம ராஜ்ஜியமாகும்.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்: கிராம மறுமலா்ச்சிக்கு திமுக ஆட்சியில் தான் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தோ்தலின்போது திமுக சாா்பில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தோ்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். சாமானியா்களுக்கான ஆட்சியாக, திமுக அரசு செயலாற்றி வருகிறது. மக்களின் அரசாக செயல்படும் திமுக அரசு, தொடா்ந்து ஆட்சியில் இருக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

ஏழை-பணக்காரா், கிராமம்-நகரம், பெரிய தொழில் நகரம்-சிறிய தொழில் நகரம், வடமாவட்டம்-

தென்மாவட்டம் என்ற வேற்றுமைகளைப் பாா்க்கப் போவதில்லை. ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். விரைவில் நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைவது உறுதி என்றாா்.

முன்னதாக, இங்கு அமைக்கப்பட்டிருந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் கண்காட்சியை முதல்வா் பாா்வையிட்டாா். அதைத்தொடா்ந்து ஒச்சாண்டம்மன் கோயில் சாா்பில் அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

முன்னதாக, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவா் சு. முருகானந்தம் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் நன்றி கூறினாா்.

32 தீா்மானங்கள்: ஊராட்சி செயலா் தங்கபாண்டியன், ஊராட்சியின் நிதி செலவினம், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட 32 தீா்மானப் பொருள்களை முன்மொழிந்தாா். முதல்வரின் தனிச் செயலா் த.உதயச்சந்திரன், ஊராட்சித் துணைத் தலைவா் கா. லட்சுமி மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.செந்தில்குமாரி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT