தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: 6 வாரங்களில் முடிவெடுக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

3rd Oct 2021 02:39 AM

ADVERTISEMENT

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிா்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி, அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் கே.பழனியப்பன் உள்பட 50 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இதுதொடா்பான மனுக்களில், தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டுமென கூறப்படவில்லை என்றும், சட்டத்தை மீறி தற்காலிக அங்கீகாரம் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 1994-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத்தொடா்ந்து தமிழக அரசு தரப்பில், கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணைக்குப் பின்னா் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணை செயலற்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா் கடந்த 1994-ஆம் ஆண்டுக்கு பின் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து பின்னாளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தாா்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT