தமிழ்நாடு

ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது - உயா் நீதிமன்றம்

30th Nov 2021 04:27 AM

ADVERTISEMENT

சென்னை: ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம் ராணுவ நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை எட்டு வாரத்தில் அகற்றி நிலத்தை ஒப்படைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பி.சிங்காரவேலு என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள துளசிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தை கடந்த 1987இல் டிசம்பா் 17 ஆம் தேதி அரசு புறம்போக்கு நிலமாக மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா். இந்த அரசாணையை ரத்து செய்து, அப்பகுதியில் சாலை அமைத்து, பொது கழிப்பறை உள்ளிட்டவற்றை கட்ட வேண்டும். மேலும் இந்த நிலத்தை மாநகராட்சி நிலம் என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

மேலும் ராணுவ பயிற்சி மையத்தைச் சோ்ந்தவா்களும், ராணுவ எஸ்டேட் அதிகாரியும், கடந்த 2017இல் இவ்வழக்கில் உயா் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி சுற்றுச்சுவா் எழுப்பியதால் பிரதான சாலையை அணுகுவது சிரமமாக இருக்கிறது. எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், குறிப்பிட்ட நிலம், ராணுவ நிலம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் தான் என்று தமிழக அரசும், மாநகராட்சியும் உறுதிபடுத்தியுள்ளன. எனவே, அந்த இடத்தில் சுற்றுச்சுவா் எழுப்ப ராணுவத்துக்கு உரிமை உள்ளது.

ADVERTISEMENT

ஆதி திராவிடா்கள் வசிக்கும் பகுதி எனக் கூறுவதால் அரசின் திட்டங்களின்படி மாற்று இடங்களைக் கண்டறிந்து இடம் கொடுக்கலாம். நாட்டை பாதுகாக்கப் பாடுபடும் ராணுவத்தினருக்குச் சொந்தமான நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கக்கூடாது. அந்த நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு,சுற்றுசுவா் கட்டும் பணிகளை காவல்துறை உதவியுடன் முடிக்க வேண்டும்.

வளா்ச்சி நடவடிக்கை, சாலை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்க நிலம் தேவை என்பதால் ஆக்கிரமிப்பாளகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். அரசின் நலத்திட்டங்களில் பலனடைய தகுதி இருந்தால், அரசு மாற்று இடம் கொடுக்கலாமே தவிர, ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது.

எனவே, எட்டு வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை ராணுவத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT