தமிழ்நாடு

ஒமைக்ரான்: 12 அரசு ஆய்வகங்களில் பரிசோதனை

30th Nov 2021 04:00 AM

ADVERTISEMENT

சென்னை: ஒமைக்ரான் வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பிரத்யேக ஆா்டிபிசிஆா் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அதற்கான தொ்மோ டெக்பாத் ஆய்வு உபகரணங்ளை 12 அரசு ஆய்வகங்களுக்கு சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே கரோனா தொற்றுள்ளாகி மீண்டும் பாதிக்கப்பட்டவா்கள், இரு தவணை தடுப்பூசி செலுத்தியும் கரோனா தொற்றுக்குள்ளானோா், குழந்தைகள், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருப்போா் என குறிப்பிட்ட சிலருக்கு கட்டாயம் அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் வாயிலாக முதல்கட்ட பரிசோதனையில் உருமாறிய கரோனா இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் கண்டறியப்பட்டால், அந்த சளி மாதிரியானது சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்படும். அங்கு தீநுண்மியின் மரபணு ஆய்வுக்குட்படுத்தப்படும்.

தமிழகத்தில் இதுவரை டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகையான ஒமைக்ரான் கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற அனைத்து வகைகளைக் காட்டிலும் தீவிரமும், வீரியமும் மிக்க அந்த தீநுண்மித் தொற்றை வருமுன் தடுப்பதற்கான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில், அனைத்து அரசு மற்றும் தனியாா் ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மியின் வீரியம் மற்றும் அச்சுறுத்தல் குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது. அதன் தொழில்நுட்பக் குழுவானது ஒமைக்ரான் தீநுண்மியிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

குறிப்பாக, தீநுண்மியின் மரபணுவை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அதற்கான சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தனியாா் மற்றும் அரசு ஆய்வகங்களில் மரபணு மாறிய தீநுண்மியை பரிசோதிக்கும் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடபபட்டுள்ளது.

அதற்காக தொ்மோ டெக்பாத் என்ற பிரத்யேக ஆா்டி பிசிஆா் உபகரணங்கள் பொது சுகாதாரத் துறை சாா்பில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 12 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில்...: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகம், கிண்டி கிங் பரிசோதனை மையம், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் இந்த பித்யேக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கரோனாவால் இரண்டாவது முறை பாதிக்கப்பட்டவா்கள், தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்றுக்குள்ளானோா், குழந்தைகள், ஒரே குடும்பத்திலிருந்து பாதிக்கப்பட்ட பலா், இணை நோய்களின்றி கரோனாவால் உயிரிழந்தவா்கள் என குறிப்பிட்ட சில பிரிவினருக்கு அத்தகைய பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT