தமிழ்நாடு

13 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய நாமக்கல் தூசூர் ஏரி!

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 13 ஆண்டுகளுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக நிரம்பியது.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக முப்பது ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 38 ஏரிகள் நிரம்பாமலும், 11 ஏரிகள் பாதி அளவிலும் நிரம்பியுள்ளன. 

இந்த மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக கருதப்படுவது நாமக்கல் -துறையூர் சாலையில் உள்ள தூசூர் ஏரி. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் அருகில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் தூசூர் ஏரி வறண்டு காட்சியளித்தது. 

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. இந்த ஏரியானது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிலைமை என்பது வருவாய்துறை கட்டுப்பாட்டிலும், அங்குள்ள மரங்கள் வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. 

ஆண்டுதோறும் குறுவை, சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ளும் வகையில் முப்போகம் விளையும் வகையில் தூசூர் ஏரி நீர் விவசாயிகள் பயன்பாட்டிற்கு இருந்தது. 

கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாதது அப்பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தி இருந்தது. இநத நிலையில் ஞாயிற்றுக்கிழமை தூசூர் ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதி மக்கள் ஏரிக்குள் பூத்தூவி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர். சிறுவர்களும், பெண்களும் ஏரியில் தண்ணீர் வழிந்து வருவதை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். 

தூசூர் ஏரி நிரம்பி ஏரியில் இருந்து தண்ணீர் வழிந்து வருவதை ஆர்வமுடன் பார்த்து ரசிக்கும் மக்கள்.

சாலையில் கடந்து செல்லும் நீர் தடுப்பணை போல் காட்சியளிப்பது அவ்வழியாக வாகனங்களில் செல்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தில்லை சிவக்குமார் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மிக முக்கியமான ஏரி தூசூர் ஏரி ஆகும். கொல்லிமலை அடிவாரம் வழியாக வழிந்தோடி வரும் தண்ணீர் முத்துகாப்பட்டி ஏரி, பாப்பன்குளம் ஏரி, சின்ன ஏரி, பெரிய ஏரி வழியாக தூசூர் ஏரியை வந்தடைகிறது. அங்கிருந்து அரூர் ஏரி, ஆண்டாள்புரம் ஏரியை சென்றடைந்து பின்னர் காவிரியில் கலக்கிறது. 

13 ஆண்டுகளுக்குப் பின் ஏரி நிரம்பி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் இப்பகுதியில் விவசாயத்துக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT