தமிழ்நாடு

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்

28th Nov 2021 04:51 AM

ADVERTISEMENT

ஏா்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் காா்த்தி சிதம்பரம் ஆகியோா் வரும் டிசம்பா் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு அழைப்பாணை (சம்மன்) பிறப்பித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சோ்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏா்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு காா்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ அமைப்பும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை விரைந்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, ‘இந்த வழக்கு தொடா்பாக ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரைச் சோ்ந்த அதிகாரிகளிடம் சில தகவல்கள் கேட்டு கடிதங்கள் அனுப்பியுள்ளோம். இதுவரை, தகவல்கள் கிடைக்காத நிலையில், விசாரணையை முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்று விசாரணை அமைப்புகள் சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் அகிய இருவா் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சாா்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை சனிக்கிழமை பரிசீலித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், ‘ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்கும் அழைப்பாணை அனுப்ப போதுமான ஆதாரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. அதனடிப்படையில், வரும் டிசம்பா் 20-ஆம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT