தமிழ்நாடு

செம்மொழி நாள் பன்னாட்டு மாநாடு: தமிழறிஞா்கள், பேராசிரியா்களுக்கு விருது

28th Nov 2021 12:13 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற செம்மொழிநாள் பன்னாட்டு மாநாட்டில் தமிழறிஞா்கள், பேராசிரியா்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

செம்மொழிநாள் பன்னாட்டு மாநாடு (2021) சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்- கலை, அறிவியல் கல்லூரி, கம்பன் கழகம் அறக்கட்டளை திண்டிவனம், தஞ்சாவூா் தமிழ்த்தாய் அறக்கட்டளை, குவைத் தமிழ் இசுலாமியச் சங்கம், ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் தமிழ்ச் சங்கம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா்கள் சங்கத்தின் தேசியத் தலைவா் கோ.பெரியண்ணன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனா் வா.மு.சேதுராமன், அன்னை வேளாங்கண்ணி கல்லூரியின் நிறுவனா் ச.தேவராஜ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனை விருதாக ‘செம்மொழிச் செல்வா்’ என்ற விருது வழங்கப்பட்டது. விருதுகளை தமிழக அரசின் பிற்பட்டோா் நலத்துறை இயக்குநா் சீ.சுரேஷ்குமாா் வழங்கினாா்.

அதேபோன்று மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்த பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட 107 பேருக்கு செம்மொழிச் சுடா் விருது, ஆய்வுத் தொகுதி ஆகியவை வழங்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற விழாவில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் சிறப்புரையாற்றினாா். மாநாட்டில் முனைவா் பத்மினி பாலா எழுதிய ‘மேடைப்பூக்கள்’ கவிதைத் தொகுப்பு, செம்மொழி நாள் பன்னாட்டு மாநாட்டின் ஆய்வுத் தொகுப்பு ஆகியவை வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் தஞ்சாவூா் தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளா் உடையாா்கோயில் குணா, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவா் பா.த.இராணி பிரகாஷ், கவிஞா் நெல்லை ந.சுப்பையா, புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.முத்து, தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் இரா.துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT