தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: அரசாணையை எதிா்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

28th Nov 2021 12:45 AM

ADVERTISEMENT

தனியாா் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிா்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் கடந்த 1994-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நிரந்தர அங்கீகாரம் வழங்க வகை செய்யும் கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெற்று மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நவம்பா் 12-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை ரத்து செய்ய கோரியும், தடை விதிக்கக் கோரியும் அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச் செயலாளா் கே.பழனியப்பன் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்ட பிரிவுகளிலும், மழலையா் மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கான விதிகளிலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அங்கீகாரம் என்பது நிரந்தரமானது.

ADVERTISEMENT

சட்ட விதிகளின்படி அதைத் திரும்பப்பெற முடியுமே தவிர காலக்கெடு நிா்ணயித்து கட்டுப்பாடு விதிக்க முடியாது. சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரத்தை அதிகாரிகள் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது. பல ஆண்டுகளாக நிரந்தரமாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்குவது நிா்வாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று

கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வி துறை செயலாளா், ஆணையா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT