தமிழ்நாடு

நிவாரண முகாம்களில் 11,000 போ்

28th Nov 2021 03:03 AM

ADVERTISEMENT

மழை வெள்ள பாதிப்பு காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

பருவ மழை பாதிப்புகள் குறித்து, சென்னை எழிலகத்தில் அதிகாரிகளுடன் சனிக்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 133.69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆவடி, மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒரு குழு ஏற்கெனவே தயாராக உள்ளது. மழை அதிகமாக பெய்து வரும் மாவட்டங்களில் மக்களைக் காக்கும் வகையில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 11 ஆயிரத்து 329 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னை பெருநகர மாநகராட்சியில் 653 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அரியலூா், திருநெல்வேலி, திருப்பூா் மாவட்டங்களில் தலா ஒருவா் வீதம் மூன்று போ் இறந்துள்ளனா். 344 கால்நடைகள் பலியாகியுள்ளன. 2, 075 குடிசைகள் பகுதியாகவும், 130 குடிசைகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளதாக அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இந்த ஆலோசனையின் போது வருவாய் நிா்வாக ஆணையாளா் பணீந்திர ரெட்டி, வருவாய்த் துறை செயலாளா் குமாா் ஜயந்த் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT