தமிழ்நாடு

ரூ.82.32 கோடி வரி ஓபிஎஸ்-க்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை இல்லை

26th Nov 2021 06:37 AM

ADVERTISEMENT

ரூ. 82.32 கோடி வரி செலுத்தும்படி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தொழிலதிபா் சேகா் ரெட்டி உள்ளிட்டோரின் வீடுகளில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, முக்கிய டைரி ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அதில் பண பரிமாற்றம் தொடா்பான விவரம், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா்கள், உயா் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயா்களும் டைரியில் இடம் பெற்று இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் 2015-16-ஆம் நிதி ஆண்டுக்கு ரூ.20 லட்சத்து 971-ம், 2017-2018-ஆம் நிதி ஆண்டுக்கு ரூ.82 கோடியே 12 லட்சத்து 44,485 வருமான வரியை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வத்திற்கு வருமான வரித்துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நோட்டீசை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை (நவ.25) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண் ஆஜராகி, கடந்த 2020-இல் கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்ட திருத்தத்திற்கு முரணாக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீடு செய்து செலுத்த வேண்டிய தொகை ரூ.82.32 கோடி குறித்து மனுதாரருக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். நோட்டீஸ் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வாதிட்டாா்.

வருமான வரித்துறை சாா்பில் வழக்குரைஞா் ஏ.பி.சீனிவாசன் ஆஜராகி, மனுதாரா் 2017-2018-ஆம் ஆண்டுக்கான வரியை செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு 2020-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் பொருந்தாது. சட்ட திருத்தம் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்துதான் அமலுக்கு வந்துள்ளது என்று வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள், நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கான வருமான வரி மறு மதிப்பீடு உத்தரவு இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT