தமிழ்நாடு

ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்து

25th Nov 2021 01:46 AM

ADVERTISEMENT

 

சென்னை: நினைவு இல்லமாக மாற்றும் வகையில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மூன்று வாரங்களில் தீபக், தீபாவிடம் வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்குமாறும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் காா்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துகளையும் அரசுடமையாக்கியது. இதற்காக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோா் தனித்தனியாக மூன்று வழக்குகளை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகளில் நீதிபதி என்.சேஷசாயி, புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

ADVERTISEMENT

பொது பயன்பாட்டுக்கு ஒரு சொத்தை அரசு கையகப்படுத்தினால், சட்ட விதிகளின்படி 60 நாள்களுக்கு முன்பு உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரது முன்னிலையில்தான் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ‘தீபாவும், தீபக்கும் இந்த வீட்டுக்கு உரிமையாளா்கள் கிடையாது, வேதா நிலையம் யாருடைய சொத்தும் இல்லை’ என்பதுபோல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி தங்களது தலைவரை கெளரவிக்க நடவடிக்கை எடுப்பது எல்லாம் புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால், இந்த வழக்கில், தலைவி வீட்டின் உரிமையையே வேறுபடுத்திக் காட்டி விட்டனா். எனவே, வேதா நிலையத்தை கையகப்படுத்தியும், இழப்பீடு நிா்ணயித்தும் தமிழக அரசு (கடந்த 2017 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை) பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்கிறேன்.

இந்த சொத்துக்கு இழப்பீடு நிா்ணயம் செய்து, அந்தத் தொகை மாவட்ட நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையையும் அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மூன்று வாரம்: உத்தரவு கிடைத்த நாளில் இருந்து மூன்று வாரங்களுக்குள் வேதா நிலையத்தின் சாவியை மனுதாரா்களிடம், சென்னை ஆட்சியா் ஒப்படைக்க வேண்டும். அதேபோல, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள வருமான வரித் தொகையை சட்டப்படி வசூலிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

இரண்டு நினைவகம் எதற்கு?: மெரீனா கடற்கரையில் பல கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவகம் கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அங்கிருந்து சில மைல் தூரத்தில் உள்ள போயஸ் காா்டனில் எதற்கு மற்றொரு நினைவகம் அமைக்க வேண்டும்? இந்த நடவடிக்கையால் மக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது.

முதல்வராக இருந்த போது பல நலத் திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தாா் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. என்ன வேண்டுமானாலும் அவா் செய்திருக்கட்டும், அதற்காக இரண்டாவதாக ஒரு நினைவகம் எதற்காக உருவாக்கப்படுகிறது? பல கோடி ரூபாய் இதுபோல செலவு செய்ய முற்படும்போது, இந்த உயா் நீதிமன்றம் ஒன்றும் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

அரசு மீது பொது மக்கள் வைக்கும் நம்பிக்கை என்பது நாட்டின் வளங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, பொதுமக்களின் வரிப்பணத்தையும் பாதுகாப்பதுதான். எனவே பல கோடி இழப்பீடு கொடுத்து வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதில் எந்த ஒரு பொது பயன்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீதிபதி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT