தமிழ்நாடு

நல்நூலகர் விருது பெற்ற டால்மியாபுரம் கிளை நூலகருக்கு பாராட்டு

24th Nov 2021 06:02 PM

ADVERTISEMENT

துறையூர்: துறையூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் நல்நூலகர் விருதுபெற்ற டால்மியாபுரம் கிளை நூலகருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

நூலகத் துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை தங்களது பணியில் அளிக்கும் நூலகர்கள் அந்தந்த மாவட்ட மைய நூலகம் சார்பில் நல்நூலகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இவர்களுக்கு மாநில அரசின் பொது நூலகத்துறை சார்பில் நூலகத்துறையின் தந்தை என போற்றப்படும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பெயரில் நல்நூலகர் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 13 ஆண்டுகால நூலகர் பணிக்காலத்தில் ரூ. 1,20,000 மதிப்பில் நூலகத்திற்காக தளவாடச் சாமான்களையும், துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் ஊர் புற நூலகத்திற்கு ரூ. 4,00,000 மதிப்பிலான காலிமனையையும் நன்கொடையாக பெற்றதற்காகவும், 89 நபர்களிடம் தலா ரூ. 1,000 பெற்று அவர்களை நூலகப் புரவலர்களாகவும், 3 பேரிடம் தலா ரூ. 5,000 பெற்று அவர்களை நூலகப் பெரும்புரவலர்களாகவும், 2,175 பேரை நூலக உறுப்பினர்களாகவும் இணைத்தமைக்காகவும், வாசகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நூலகம் வர ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டதையும் கருத்தில் கொண்டு தற்போது டால்மியாபுரம் நூலகத்தின் கிளை நூலகர் சி.என். சாந்தியை  நிகழாண்டு(2021)க்கான நல் நூலகர் விருதுக்கு திருச்சி மாவட்ட நூலகர் அ.பொ.சிவகுமார் பரிந்துரைத்தார்.

செவ்வாய்க்கிழமை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டால்மியாபுரம் கிளை நூலகர் சி.என்.சாந்திக்கு வெள்ளிப்பதக்கம் அணிவித்து, நல் நூலகர்  விருது  ரூ. 5,000 கசோலை ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.
இதில் கலந்து கொண்ட பொது நூலக இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன், திருச்சி மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் ஆகியோரும் சாந்தியை பாராட்டினர்.

ADVERTISEMENT

விருது பெற்ற நூலகர் சாந்தி நெகிழ்ச்சி

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனக்கு விருது வழங்கும் போது நூலகத்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாழ்வோடு நெருங்கித் தொடர்புடைய கல்லகுடி -டால்மியாபுரம் பகுதியிலிருந்து நல் நூலகர் விருதுக்கு தேர்வாகி விருது பெறுவதை சுட்டிக் காட்டி தொடர்ந்து நூலகத்துறையில் சிறப்பாக செயல்படும்படியும் வாழ்த்தியது தனக்கு ஊக்கத்தை தருவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

முழு நேர நூலகமான துறையூர் நகர கிளை நூலகத்தின் நூலகர்களில் ஒருவராக தற்போது பிரதிநித்துவ அடிப்படையில் பணியாற்றும் சி.என்.சாந்தியை துறையூர் கிளை நூலகர் பெ.பாலசுந்தரம் மற்றும் வாசகர் வட்ட தலைவர் தி.நடராஜன் உள்ளிட்டோரும் சகப்பணியாளர்களும், உறவினர்களும்  பாராட்டினர். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT