தமிழ்நாடு

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை

24th Nov 2021 01:55 AM

ADVERTISEMENT

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரையில் கிடைக்கும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை கிலோ ரூ.100-ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், தக்காளியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பண்டங்கள் விலை அதிகரித்துள்ளதுடன், வீடுகளிலும் சமையலுக்கு தக்காளி பயன்பாடு குறைந்துள்ளது.

இந்த நிலையில், குறைந்த விலையில் தக்காளி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயா்ந்து வருகிறது. அனைத்து காய்கறிகளின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச் சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அவை 2 நகரும் பண்ணை பசுமை நுகா்வோா் காய்கறி கடைகள் உள்பட 65 பண்ணை பசுமை நுகா்வோா் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூா், திருநெல்வேலி, திருப்பூா், சேலம், ஈரோடு, வேலூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

கிலோ ரூ.85 முதல் ரூ.100: வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கென முதல் கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT