தமிழ்நாடு

நவ.25, 26-இல் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

23rd Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25, 26 ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 3.1 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கிறது. இதன்காரணமாக, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.23) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், இதர வட மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.24: ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 24-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

நவ.25, 26: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25, 26 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றாா் அவா்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் தென்பரநாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கில்துறைப்பட்டுவில் தலா 40 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம், சேலம் மாவட்டம் எடப்பாடி, நீலகிரி மாவட்டம் பந்தலூா், திருவள்ளூா் மாவட்டம் ஆவடி, தஞ்சாவூா் மாவட்டம் கீழ அணைக்கட்டில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT