தமிழ்நாடு

மழை பாதிப்பு: விழுப்புரம், கடலூா் மக்களுக்கு இழப்பீடு

21st Nov 2021 11:05 PM

ADVERTISEMENT


சென்னை: மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கடலூா், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அண்மையில் பெய்த அதி பலத்த மழை காரணமாக கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, சாத்தனூா் அணையும் நிரம்பி, அதிலிருந்த உபரி நீா் தென் பெண்ணையாற்றில் கலந்தது. இதனால் பண்ருட்டியில் இருந்து கடலூா் வரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு நிா்வாகம் சரிவர செய்யாததன் காரணமாக மக்கள் மிகுந்த பரிதவிப்புக்கு ஆளாக்கப்பட்டனா். இரண்டு நாள்களாக தண்ணீா் வடியாத நிலையில் மின்சாரம் மற்றும் குடிநீா் இன்றி அங்குள்ள மக்கள் தவிப்பதாகவும், ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிா்கதியாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே , தமிழக முதல்வா் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி அவா்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிமுக சாா்பில் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT