தமிழ்நாடு

நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூ. செயலாளர் வெட்டிகொலை

10th Nov 2021 08:53 PM

ADVERTISEMENT


நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றியச் செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன் (51). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராகவும், கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

இவரது மனைவி பழனியம்மாள் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராவார். நடேச.தமிழார்வனுக்கு வக்கீல் தமிழ்ஸ்டாலின் பாரதி, இன்பதமிழன் என்கிற இரண்டு மகன்கள், ஒருமகள் உள்ளனர்.

நீடாமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். நடேச.தமிழார்வன் புதன்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் தனது காரில் நீடாமங்கலம் வடக்குவீதி பகுதியில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தமிழார்வனை அரிவாளால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் துடிதுடித்த தமிழார்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையும் படிக்கதமிழகத்தில் கனமழையால் நேற்று 3 பேர் உயிரிழப்பு: அமைச்சர் தகவல்

தமிழார்வனை கொலை செய்த மர்ம நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த தமிழார்வன் உறவினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆத்திரமடைந்து சாலையில் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் அரசு பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இருசக்கர வாகனத்திற்கு தீவைக்கப்பட்டது. கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீடாமங்கலமே கலவர சூழ்நிலையானது.

தகவலறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்,
மன்னார்குடி டிஎஸ்பி பாலசந்தர் மற்றும் போலீசார் நீடாமங்கலத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்தனர்.

நடேச.தமிழார்வன் கொலையான சம்பவம் குறித்து தகவலறிந்த நாகை பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், கட்சியின் மாநில குழுஉறுப்பினர் வை.செல்வராஜ்,  மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், தேசியகுழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலரும் நீடாமங்கலம் விரைந்து வந்தனர்.

இதையும் படிக்கரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தால் தான் தமிழார்வனின் உடலை பிரேத பிரசோதனைக்கு போலீசார் எடுத்துச் செல்லலாம் என தமிழார்வன் உறவினர்கள், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் மறித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் தமிழார்வன் உறவினரிடமும் ,இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. போலீசாரின் தீவிர விசாரணை அடிப்படையில் குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும் என தெரிகிறது. கொலை சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நீடாமங்கலத்தில் பதற்றம் நீடிக்கிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT