சிதம்பரம்: கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளர்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி சென்னை- கடலூர் இடையே கரையை கடக்கும் என தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு நவ.10, 11 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. மேலும் கீழணையிலிருந்து சுமார் 15 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின் பேரில் சிதம்பரம் காவல் கோட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. 6 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டும் மாமண்டூர் பாசன ஏரி; விவசாயிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தெரிவித்தது: புயல், வெள்ளத்திலிருந்து மக்களை மீட்பதற்காகவும், மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டால், மரங்களை அப்புறப்படுத்துவதற்கும் சிதம்பரம் காவல் கோட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 80 பேர் மீட்புப் படையினர் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை நீர்நிலைகளில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம். மேலும் யாரும் நீர் நிலைகளில் இறங்கக்கூடாது. மீன்பிடிக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வனத்துறையினர் முதலைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கனமழையின் போது மக்கள் அத்தியாவசியமின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தெரிவித்தார். அப்போது ஆய்வாளர்கள் ஆறுமுகம், குணபாலன், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.