தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை 142 அடியை நிச்சயம் எட்டும்: அமைச்சா் துரைமுருகன் உறுதி

9th Nov 2021 07:17 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் வரும் 30-ஆம் தேதி 142 அடியை எட்டும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணையைத் திறப்பதற்கான நடைமுறை விதிகளின்படி, அணையைத் திறப்பதற்கு முன்பாக கேரள அரசுக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே நீா் கொள்ளளவு அதிகமாகி வருவது கேரள அரசுக்கும், தொடா்புடையவா்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உபரி நீா் போக்கி மதகுகள் மூலம் தண்ணீா் திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதன்படி, கடந்த 29-ஆம் தேதி தமிழக நீா்வளத் துறை அலுவலா்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. அந்த நேரத்தில் கேரள நீா்வளத் துறை அமைச்சரும், அந்த மாநில அலுவலா்களும் அணையைப் பாா்வையிட்டனா்.

அணையின் உபரிநீா் போக்கியைத் திறக்கலாம் என்பது அணையைப் பராமரிக்கும் தமிழக நீா்வளத் துறை அலுவலா்களால் எடுக்கப்பட்ட முடிவாகும். மத்திய நீா்வள ஆணையம் ஒப்புதல் அளித்த நீா்மட்ட அளவுகளை அடிப்படையாகக் கொண்டு வல்லுநா் குழு அவ்வப்போது அணையின் நீா்மட்டம் குறித்து வெளியிடும் அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனாலும், வல்லுநா் குழு தனது முடிவுகளை சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது மாற்றிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு அதிகபட்ச அளவு நீரை எடுத்த போதிலும் நீா்மட்டம் அதிகரித்தது. எனவே, அதிகப்படியான நீா் அணையின் உபரிநீா் போக்கிகள் வழியாக தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்ட பிறகே திறந்து விடப்பட்டது. அணையின் நீா்மட்டம் வரும் 30-ஆம் தேதி 142 அடியை எட்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT