தமிழ்நாடு

நாளைமுதல் வடமாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை

9th Nov 2021 06:35 AM

ADVERTISEMENT

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்துக்கு 5 நாள்கள் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவ. 10, 11-ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை (நவ.9) பலத்த மழையும், நவ.10, 11-ஆம் தேதிகளில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், கடலூா், பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 10-ஆம் தேதி 200 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின்

ADVERTISEMENT

சில இடங்களில் நவ.11-இல் பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழையும் பெய்யக் கூடும். சென்னையைப் பொருத்தவரை இந்த இரண்டு நாள்களும் பலத்த மழை நீடிக்கும். நவ.10-ஆம் தேதி மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தீவிரத்தைப் பொருத்து சிவப்பு எச்சரிக்கை விடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

மீனவா்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், செவ்வாய்க்கிழமை (நவ.9) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கும், நவ.10-ஆம் தேதி வரை, தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதிகளுக்கும், நவ.11-ஆம் தேதி வரை தெற்கு ஆந்திரம் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளுக்கும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT