தமிழகத்தில் திருவள்ளூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ.6) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 5.8 கி.மீ. உயரம்வரை நிலவுகிறது.
இதன்காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூா் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ.6) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 7: நீலகிரி, கோயம்புத்தூா், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 7-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் சனிக்கிழமை ( நவ.6) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கா்நாடக கடலோர பகுதிகளுக்கு நவம்பா் 7-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.