தமிழ்நாடு

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு பழங்குடியினருக்கு நல உதவிகள்: முதல்வா் உத்தரவு

5th Nov 2021 11:55 PM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 2 வாரங்கள் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட நல உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

திருக்கழுகுன்றம் பூஞ்சேரியில் வசிக்கும் இருளா் மற்றும் நரிக்குறவா் மக்களுக்கு நல உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.இந் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்வா் ட்விட்டரில் கூறியிருப்பது:

சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி. சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல, மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.

அதனைத்தான், நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது என்று கருணாநிதி குறிப்பிட்டாா்.

ADVERTISEMENT

திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே. ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது.

பூஞ்சேரி கிராமத்து இருளா் மற்றும் குறவா் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக் கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன். இருளா் மற்றும் குறவா் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது.

இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழகம் முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது. பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரை நெஞ்சிலேந்தி அவா்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT