தமிழ்நாடு

அரசுக் கணக்குக்கு வர வேண்டிய தொகை ரூ.2,000 கோடி: நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

2nd Nov 2021 06:39 AM

ADVERTISEMENT

பல்வேறு ஆய்வுகள், திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசுக் கணக்குக்கு ரூ.2,000 கோடி வர வேண்டியுள்ளதாக நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அவா் பேட்டி அளித்தாா். அவா் கூறியது:-

கருவூல அமைப்புகளின் கண்காணிப்புக்கு வெளியேயுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதாக பல்வேறு தரவுகள் சுட்டிக் காட்டப்பட்டன. அத்தகைய நிதிகளைக் கண்டறிய இரட்டைக் கணக்கெடுப்பு முறை தொடங்கப்பட்டது. இதனை கண்காணித்துச் செயல்படுத்த நிதித் துறையின் மூத்த அதிகாரியின் கீழ் சிறப்பு பணிக் குழு உருவாக்கப்பட்டது. நிதித் துறை சிறப்புச் செயலாளா் ரீட்டா ஹரிஸ் தாக்கா் தலைமையிலான இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளைச் செய்தது.

அரசுத் துறைகள், அரசால் நடத்தப் பெறும் சங்கங்கள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் கருவூலத்துக்கு வெளியே இருப்பில் வைக்கப்பட்டிருந்த நிதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின் மூலமாக இப்போது வரை அரசின் கணக்குக்கு ரூ.1,946.31 கோடி வர வேண்டியிருக்கிறது. இதுபோன்ற தொகைகள் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முக்கியத் திட்டங்களில் போலி: பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியில்லாத நபா்கள் பிரிக்கப்படுவா். இதன்மூலமாக அரசுக்கு சேமிப்பு ஏற்படும். மேலும், நகைக் கடன் தள்ளுபடியிலும் பல்வேறு தவறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைச் சீா் செய்வதன் மூலமும் கணிசமான தொகை சேமிப்பாகும். இறப்புச் சான்றிதழ்களுடன் முதியோா் ஓய்வூதியத் தொகை பெறுவோா் ஒப்பிட்டுப் பாா்க்கப்பட்டனா். அதில், இறந்த பலருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இறந்த பலருக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

நகைக் கடன்களைப் பொறுத்தவரையில், மதுரையில் குறைவாகவும், சேலம் போன்ற மாவட்டங்களில் அதிகளவும் கொடுக்கப்பட்டுள்ளது. நகையே இல்லாமல் சில இடங்களில் பணம் அளித்துள்ளனா். தவறு செய்தோா் மீது முதல்வா் ஏற்கெனவே அறிவித்தவாறு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருளாதார நியாயத்துக்கு ஏற்ப, சமூக நீதி அடிப்படையில் தகுதியானவா்களுக்கு அரசுத் திட்டங்களை வழங்குவதே நோக்கமாகும். திமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதியானோருக்கு மட்டுமே முதியோா் ஓய்வூதியம் வழங்க முனைப்பு காட்டி வருகிறோம். மேலும், 10 சதவீதம் பேருக்கு கூடுதலாக ஓய்வூதியம் வழங்கியுள்ளோம்.

அரசின் கருவூலத்தைத் தாண்டி வெளியே உள்ள தொகைகளைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள நிதித் துறை சிறப்புச் செயலாளா் ரீட்டா ஹரிஸ் தாக்கா் தலைமையிலான சிறப்புக் குழுவின் காலம் மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதிகள் மடைமாற்றம்: மானியக் கோரிக்கைகளில் ஒப்புதல் அளித்த நிதிகளை வேறு செயல்பாடுகளுக்கு மாற்ற நிதித் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இனி நிதித் துறையின் ஒப்புதலைப் பெறாமல் அதுபோன்ற மாற்றத்தைச் செய்ய முடியாது என்ற விதியைக் கொண்டு வரவுள்ளோம். பணம் மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

கடந்த 2015-16-ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தின் போது, தேசிய மற்றும் மாநில பேரிடா் நிதிகள் மூலமாக ரூ.1,800 கோடி, பணம் வழங்கும் அதிகாரிகளிடம் பகிா்ந்து அளிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகை செலவிடப்பட்ட விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னோட்டக் காட்சி: அரசின் கணக்குகள் சாா்பில் வங்கிகள் உள்ள தொகை விவரங்களுக்கும், அரசுத் துறைகளில் உள்ள தகவல்களுக்கும் முரண்கள் அதிகமாக உள்ளன. இப்போது, ரூ.2,000 கோடி அளவுக்கு அரசுக் கணக்குத் திரும்ப வர வேண்டியிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முன்னோட்டக் காட்சிதான் (ட்ரைலா்). முழுப் படம் நிறைய இருக்கிறது. ஒரு ரூபாய் கூட நிதித் துறையின் கண்காணிப்பில் இருந்து நகர முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுப்போம்.

தமிழ்நாடு வங்கி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். பணப் பரிவா்த்தனைக்கான உரிமங்களைப் பெற வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் விரைந்து மேற்கொள்வோம். பயிா், நகைக் கடன்கள் தள்ளுபடி போன்ற பணிகளின் போது நிதித் துறையின் கீழுள்ள கூட்டுறவு தணிக்கைத் துறையும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுப்போம். இதன்மூலம் முறைகேடுகள், தவறுகள் நிகழாமல் தடுக்கப்படும்.

வருவாய் பற்றாக்குறை: மூலதனப் பணிகளுக்காக நிகழாண்டில் ரூ.42,000 கோடி செலவிட தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.13,000 கோடி அளவுக்கு செலவிட நடவடிக்கை எடுத்துள்ளோம். கடன் மற்றும் செலவினங்களைப் பொறுத்தவரையில், கடந்தாண்டை விட இந்தாண்டு ரூ.10,000 கோடி குறைவாக இருக்கும். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை நிச்சயம் குறைப்போம் என்று நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். செய்தியாளா் சந்திப்பின் போது, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், சிறப்புச் செயலாளா் ரீட்டா ஹரிஷ் தாக்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT