தமிழ்நாடு

டெங்குவால் வேளாண் உதவி இயக்குநர் மரணம்: சடலத்துடன் கணவர், குழந்தைகள்  மாயமானதால் பரபரப்பு

1st Nov 2021 01:50 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல்லில், வேளாண் துறையில் பணியாற்றி வந்த உதவி இயக்குனர் ஞாயிற்றுக்கிழமை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் சென்ற கணவர் மாயமானதால் பரபரப்பு நிலவுகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான உதவி இயக்குனராக அ.வசுமதி(53) என்பவர்  பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு,  நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 10:30 மணி அளவில் வசுமதி உயிரிழந்தார். 

இதையும் படிக்கலாமே.. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை: தமிழக அரசு

ADVERTISEMENT

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பின் உடல் நலம் தேறினார். தற்போது டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது கணவர் அருளீஸ்வரன். இவர்களுக்கு ஒரு மகளும்,  மகனும் உள்ளனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகம் கைலாசம்பாளையம் பகுதியில் வசித்துவந்த வேளாண்மை உதவி இயக்குநர் வசுமதி டெங்குவால் இறந்ததை அடுத்து அந்தப் பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலை ஒருபுறமிருக்க, ஞாயிற்றுக்கிழமை தனியார் மருத்துவமனைக்குச் சென்று இறந்த உதவி இயக்குனரின் உடலை அருளீஸ்வரன் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸில் சென்றனர். ஆனால் அந்த ஆம்புலன்ஸ் சொந்த ஊரான வடுகத்துக்குச் செல்லாமல் பொள்ளாச்சியை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தற்போது வரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. அருளீஸ்வரனின் கைப்பேசி இயங்கவில்லை. 

அவர்கள் எங்குச் சென்றார்கள் என்பது தெரியாமல், கடந்த இரண்டு நாள்களாக வசுமதியின் குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் எதுவும் செய்யப்படவில்லை. நாமக்கல்லில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் கரூர் வழியாக சென்றபோது அவரது கணவர் சடலத்தை ஆம்புலன்சில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றி புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. வேளாண் துறையில் அவருடன் இணைந்து பணியாற்றிய அலுவலர்கள் வசுமதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

வேளாண்மை உதவி இயக்குனர்  உயிரிழப்பு குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது; டெங்கு பாதிப்பால் வசுமதி உயிரிழந்துள்ளார். அவரது உடலை கணவர் மற்றும் மகன், மகள்தான் பெற்றுச் சென்றனர். சற்று மது போதையில் தான் அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். தானும் மகன், மகளும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கண்ணீர் விட்டார் என தெரிவித்தனர். 

டெங்குவால் உயிரிழந்த வேளாண் உதவி இயக்குனரின் சடலம் எங்கே உள்ளது என்பது பற்றிய தகவல் கிடைக்காதது நாமக்கல்லில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT