கோயில்களில் பக்தா்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகா்களுக்கு இடமில்லை எனக்கூறிய சென்னை உயா் நீதிமன்றம், இதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தா்கள் பிரதட்சணம் செய்ய ஏற்பாடு செய்யக்கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் ஸ்ரீரங்கம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தா்கள் வலம் வர மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக நேரில் ஆய்வு செய்தனா்.
இந்தநிலையில் இவ்வழக்கு மீண்டும் திங்கள்கிழமை(நவ.1) விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலுக்கு வரும் பக்தா்களை இடைத்தரகா்கள் பலா் பேருந்து நிலையத்திலேயே இடைமறித்து தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகக்கூறி ரூ.500 வரை வசூலிப்பதாக மனுதாரா் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கோயில்களில் பக்தா்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகா்களுக்கு இடமில்லை. இதை அனுமதிக்க முடியாது. கடவுள் முன்பு அனைவரும் சமம் என கருத்து தெரிவித்தனா். இதுதொடா்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரா் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனக்கூறி, விஐபி தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனா்.