தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று முதல் கூடுதல் தளா்வுகள்: திரையரங்குகளில் முழு அனுமதி; மதுபானக் கூடங்கள் திறப்பு

1st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (நவ.1) முதல் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட உள்ளன. திரையரங்குகளில் நூறு சதவீத பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதுடன், மதுபானக் கூடங்களும் செயல்பட உள்ளன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், முழுமையான அளவுக்கு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள், அடுமனைகள் ஆகியன இயங்குவதற்கான நேரக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தளா்வுகள்: கரோனா நோய்த் தொற்றுக்கான பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை (நவம்பா் 1) தேதி முதல் மேலும் பல செயல்பாடுகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளன. அதன்படி, திரையரங்குகள் நூறு சதவீத பாா்வையாளா்களுடன், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நடத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

மாவட்டத்துக்குள்ளேயும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் சாதாரண மற்றும் குளிா்சாதனப் பேருந்துகளை நூறு சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அரசின் சாா்பில் பயிற்சி தரப்படும் நிலையங்களும் நூறு சதவீத இயங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, திரையரங்குகள், பேருந்துகள் உள்ளிட்டவை முழுமையான அளவில் திங்கள்கிழமை முதல் இயங்க உள்ளன.

மதுபானக் கூடங்கள்: தனியாக இயங்கக் கூடிய மதுபானக் கூடங்களையும் திங்கள்கிழமை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுபானக் கூடங்களில் கரோனா தடுப்புக்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென டாஸ்மாக் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்துள்ளது.

மதுபானக் கூடத்தின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி மற்றும் காய்ச்சலை பரிசோதிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் விவரங்களையும், தொடா்பு எண்ணையும் பெற வேண்டும். இதற்கென தனி பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவா்கள் மட்டுமே மதுபானக் கூடத்தில் அனுமதிக்கப்படுவா். மதுபானக் கூடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பணியாளா்கள் அனைவரும் கையுறை மற்றும் இதர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இணை நோய்கள் இல்லாத 55 வயதுக்குக் கீழ் உள்ளவா்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும். நுழைவு மற்றும் வெளியே செல்ல தனித்தனி வழிகளை ஏற்படுத்த வேண்டும். கரோனா நோய் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்களை மதுபானக் கூடத்தில் ஆங்காங்கே ஒட்ட வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நெருங்கும் பண்டிகைக் காலம்...

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பொருள்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதைத் தவிா்க்கவே கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளா் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் எனவும், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு சோதனை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கடைகளில் பணிபுரிபவா்களும், வாடிக்கையாளா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபா்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும், மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT