தமிழ்நாடு

தமிழகத்தில் 84.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

29th May 2021 03:41 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 84.5 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். அதே போல், சென்னையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் கார் ஆம்புலன்ஸ் சேவையையும் திருப்பூரில் தொடக்கிவைக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் மூலமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்,ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும்.   

ADVERTISEMENT

திருப்பூரில் 1,000 படுக்கைகள் அளவுக்கு காலியாக உள்ளதால் பதற்றமற்ற சூழல் உருவாகியுள்ளது. திருப்பூரில் 2.12 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள 16 ஆயிரம் தடுப்பூசிகளும் ஞாயிற்றுக்கிழமை போடப்படும். தமிழகத்துக்கு வந்துள்ள 95.5 லட்சம் தடுப்பூசிகளில் தற்போது வரையில் 84.5 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 லட்சம் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 லட்சம் தடுப்பூசிகளும் இருந்து கொண்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் 2,3 நாள்களில் பயனாளிகளுக்கு செலுத்தப்படும். 

மேலும், தடுப்பூசி தடுப்பாட்டை போக்கும் வகையில் 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளாவிய அளவில் ஒப்பந்தம் மூலமாகப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஒப்பந்தப்படிவங்களை ஜூன் 4 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும், ஜூன் 5 ஆம் தேதி எந்த நிறுவனம் என்பது முடிவு செய்யப்பட்டு 6 மாதத்துக்குள் 3.5 கோடி தடுப்பூசிகளை அவர்கள் வழங்க வேண்டும் என்று விதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மாநில அரசு ரூ.85 கோடி செலுத்தி 23.5 லட்சம் தடுப்பூசியைப் பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசியைக் கேட்டுப் பெறுவதற்காக தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின் உத்தரவின்பேரில் டி.ஆர்.பாலு எம்.பி.ஒரு வாரத்துக்கும் மேலாக தில்லியிலேயே முகாமிட்டுள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் ஆக்சிஜன் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. தமிழக முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக ஆக்சிஜன் தினசரி கையிருப்பு 650 மெட்ரிக் டன்னாக உள்ளது.

திருப்பூரில் கருப்புப் பூஞ்சைநோயால் இருவர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கான மருந்துகளையும் மத்திய அரசிடம் இருந்து மருத்துவர்கள் கேட்டுப் பெற்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.கோவை, திருப்பூர்,ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் விதிமுறைகளை மீறி இயங்கிய நிறுவனங்களால் தொற்று அதிகரித்துள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் குறித்துக் கண்காணித்து வருகின்றனர். 

அவ்வாறு விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT