தமிழ்நாடு

கரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

DIN


சேலம்: தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் இறப்போர் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைளைப் போலவே, தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தினால் மட்டுமே கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும், மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சை மையங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது, கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகரிப்பது, தொற்றுப் பரிசோதனையை நாளொன்றுக்கு மூன்று லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எடப்பாடி பகுதியில் கரோனா பாதிப்பு குறித்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் படுக்கைகள் விவரம் ஆகியவற்றை அரசு தலைமை மருத்துவர் சரவணகுமாரிடம் கேட்டறிந்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனையடுத்து, எடப்பாடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு காய்கறித் தொகுப்பு மற்றும் பாதுகாப்பு கவச உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
 
எடப்பாடி நகரத்தில் அரசு மருத்துவமனையில் 48 பேர் ஆக்சிஜன் வசதியுடன் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தாக்குதலால் மூச்சுத்திணறல் பெற்றவர்களுக்கான ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. ஆத்தூர், மேட்டூர், ஓமலூர்,சங்ககிரி என ஊரகப் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. அவசர சிகிச்சைக்கான படுக்கை வசதியும் நிரம்பி விட்டன. 1153 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தற்போது நிரம்பியுள்ளது. புதிதாக பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை கிடைக்காத நிலையே உள்ளது. அரசு விரைவாக கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டும். சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கை வசதி ஆக்சிஜன் வசதியுடன் ஒரு வாரத்தில் உருவாக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் இதுவரை தொடங்கவில்லை. போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதுள்ள ஆக்சிஜன் படுக்கைகள் போதாது. மூச்சுத்திணறல் ஏற்படுவோருக்கு ஆக்சிஜன் வசதி கட்டாயம் தேவை. விரைந்து ஏற்படுத்த வேண்டும். சேலம் மாவட்டம் முழுவதும் கரோனா சிகிச்சை மையத்தில் 3800 படுக்கைகள்தான் உள்ளது. ஆனால் 11 ஆயிரத்து 500 படுக்கைகள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. தவறான புள்ளி விவரத்தை கூறுகிறார்கள். ஒவ்வொரு பேரவைத்தொகுதி வாரியாக எத்தனை படுக்கைகள் உள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதி விவரங்களை நாள்தோறும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா நோயாளிகள் அங்கு சென்று சிகிச்சை பெற முடியும்.
 
267 ஆய்வுக்கூடங்கள்:  நான் முதல்வராக இருந்தபோது 267 ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டன. அதன் மூலம் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. இப்போதும் அந்த எண்ணிக்கையில்தான் உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும். அதன் மூலம் உரிய நேரத்தில் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியும். தற்போது ஒரு லட்சம் பேருக்கு தினசரி பரிசோதனை நடைபெறுகிறது. இது போதாது. நாளொன்றுக்கு 36 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. உடனடியாக அங்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும். இதேபோன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் உரிய ஆக்சிஜன் வழங்கிட வேண்டும். இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு தங்குதடையின்றி ஆக்சிஜன் வழங்க வேண்டும்.
 
இறப்பை குறைத்து காட்டுகிறார்கள்: தற்போது இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. எல்லா மயானங்களிலும் சடலங்கள் காத்து கிடக்கின்றன. இதுகுறித்து தகவல்கள் ஊடகங்களில் முழுமையாக வெளியாகவில்லை. கரோனா இறப்பை குறைத்து காட்டும்போது, மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்காது. அந்த சடலங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி நிகழ்வுகள் மேற்கொள்ளும்போது, அங்கு ஏராளமானோர் கலந்து கொள்வதால் தொற்று பாதிப்பு அதிகமாகிறது. தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், பல மணி நேரம் மயானங்களில் காத்து கிடக்க வேண்டியிருக்கிறது. மயானங்களில் தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
 
அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், படுக்கை வசதிக்காக ஆம்புலன்ஸிஸ் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கும் உரிய சோதனை மூலம் கரோனா இருக்கிறதா என கண்டறிந்து உரிய கவச உடைகளைக் கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். இதனையெல்லாம் தவிர்க்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு கிராமங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தளர்வில்லா ஊரடங்கிற்காக, கடந்த சனிக்கிழமை மதியம் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை விதிகள் தளர்த்தப்பட்டதால் 6 லட்சம் பேர் வரை நகரங்களில் இருந்து கிராமத்திற்கு வந்து விட்டனர். அவர்களுக்கு எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, கிராமத்தில் புதிதாக யார் வந்தாலும் சோதனை நடத்திய பிறகே அனுமதித்தோம். இதனால்தான் அப்போது கட்டுக்குள் இருந்தது.
 
இந்தியாவிலேயே தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும். அதிக அளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். இதன்மூலம் ஆரம்ப அறிகுறிகள் நிலையில் கரோனா பாதிப்பு கண்டறியமுடியும். வீடுவீடாக களப்பணியாளர்களைக் கொண்டு கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 15 ஆயிரம் பேரை நியமித்தோம். இதேபோன்று, திமுக அரசும் கூடுதலாக தேவைப்படுவோரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதிமுக அரசு பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் உச்சபட்சமாக 6900 பேர் பாதிக்கப்பட்டார்கள். நாங்கள் தொடர்ந்து எடுத்த நடவடிக்கையால், கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி 487 பேர்தான் பாதிக்கப்பட்டனர். அன்றையதினம் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் எந்த அதிகாரியும் அழைத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் பரவல் அதிகரித்ததால் தலைமைச் செயலாளரை அழைத்துப் பேசும்போது, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியும் கூட அதிகாரிகள் மட்டுமே ஆலோசனை நடத்த மட்டுமே அனுமதி கிடைத்தது. அப்போதும் முயற்சி எடுத்துக் கொண்டே இருந்தேன். சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது உண்மைக்கு புறம்பான செய்தி.
 
இதேபோன்று, முதல்வர் ஸ்டாலின் முதல் அலையில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று கூறியிருக்கிறார். அது தவறு, வல்லரசு நாடுகளில் கூட அதனை கட்டுப்படுத்தவில்லை. அதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததால் தான் 500-க்கு கீழ் தொற்று பாதிப்பு குறைந்தது. கரோனா குறித்து எதுவும் தெரியாத நிலையில் உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை அளித்த வழிகாட்டுதலை பின்பற்றி குணமடையச் செய்தோம். ரெம்டெசிவர், முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தும் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருந்தோம். தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளரை கேட்டால் தெளிவுபடுத்துவார்.
 
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தடுப்பூசி குறித்து சந்தேகம் தெரிவித்த ஸ்டாலின், தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்படி கருத்துக்களை கூறும்போது மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு விட்டது. இப்போது கூறும் கருத்துக்களை அவர், அப்போது தெளிவாக பேசியிருந்தால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பார்கள்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் பணி எல்லா விவரங்களையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதே. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இன்றைக்கு மயானங்களில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற முதல்வரின் கூற்றிற்கு இணங்க, எல்லா இடங்களில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அங்காங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
 
அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். இது சோதனையான நேரம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு மறந்து செயல்பட வேண்டும். நூறு நாள்களுக்கு பின்னரே கருத்து சொல்ல வேண்டும் என்று இருந்தேன். எங்களுடைய அரசை குறை சொன்னதால்தான், நாங்கள் கருத்து சொல்ல வேண்டி வந்தது.
 
கிராமங்களில் தொற்றுப்பரவலை தடுக்க, புதிதாக வருபவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். கிருமிநாசினி தொடர்ந்து அடிக்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அதிக அளவில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும்.

கோவை, திருப்பூர், ஈரோடு தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. திருப்பூரில் பல மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். கோவை மாவட்டத்திலும் பல மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிகிறார்கள். பரிசோதனைகள் அதிகரித்தால் மட்டுமே தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
 
கடந்த ஆண்டு தடுப்பூசி இல்லாத காலகட்டத்தில் தொற்றுப்பரவலை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். உடனடியாக ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பது, கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பதுதான் தீர்வாக அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT