தமிழ்நாடு

"கரோனா தடுப்புப் பணிகள்: அதிமுக தொகுதிகளில் பாரபட்சம்'

28th May 2021 04:38 AM

ADVERTISEMENT


மதுரை: கரோனா தடுப்புப் பணிகளில் அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், தேனி மக்களவை உறுப்பினர் ப. ரவீந்திரநாத், சட்டப்பேரவை உறுப்பினர் பி.அய்யப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ்சேகரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர்  ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை மாவட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிகளான திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மேலூர் ஆகிய 5 தொகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள், தடுப்பூசி போடுவதில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பற்றாக்குறையைக் காரணம்காட்டி மூடப்பட்டிருக்கும் அம்மா சிறு மருத்துவமனைகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.    
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியது: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அதிகாரிகள் பலரையும் இடமாற்றம் செய்துள்ளது. கரோனா தடுப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதற்கு அதிகாரிகளின் அவசியமற்ற இடமாறுதல் தான் காரணம். கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT