தமிழ்நாடு

புதுவையில் தற்காலிக பேரவைத் தலைவர், எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு

27th May 2021 04:25 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் 15-வது சட்டப்பேரவைக்கான தற்காலிக பேரவைத் தலைவர், எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 33 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தற்காலிக பேரவைத் தலைவர் பதவியேற்பு: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தற்காலிக பேரவைத் தலைவர் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், தற்காலிக பேரவைத் தலைவரான க.லட்சுமிநாராயணனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் என்.ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு: இதைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக பேரவைத் தலைவர் அலுவலக அறையில், எம்எல்ஏக்கள் இருவர் வீதம் அழைக்கப்பட்டு எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற்றது.

ADVERTISEMENT

முதல்வர் என்.ரங்கசாமி எம்எல்ஏவாக முதலில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தற்காலிக பேரவைத் தலைவர் க.லட்சுமிநாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், எம்எல்ஏக்கள் இருவர் வீதம் தனித்தனியே பேரவைத் தலைவர் அறைக்கு வந்து பதவியேற்றுக் கொண்டனர்.

நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு: இதனிடையே, புதுவை சட்டப்பேரவைக்கு நியமிக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்கள் அனைவருக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் க.லட்சுமிநாராயணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பேரவைச் செயலர் இரா.முனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

புதுவை சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பின்போது, முக்கிய கட்சி நிர்வாகிகள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பாஜக பலம் 12-ஆக உயர்வு: புதுவை மாநிலத்தில் பாஜகவுக்கு புதன்கிழமை மேலும் இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஏற்கெனவே ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12-ஆக உயர்ந்தது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தனர். இதில், என்.ஆர். காங்கிரஸ் 10, பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்று, என்.ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தனர்.

இதனிடையே, புதுவையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான கோலப்பள்ளி சீனுவாஸ் அசோக், முன்னாள் அமைச்சர் அங்காளன், உழவர்கரையில் வெற்றி பெற்ற சிவசங்கரன் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களுடன், 3 நியமன எம்எல்ஏக்களும் பாஜகவைச் சேர்ந்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12-ஆக உயர்ந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT