தமிழ்நாடு

ஏழு ரூபாய் நன்கொடை: பசித்திருக்கும் ஒருவருக்கு ஒரு வேளை பசியாற்றும் திருப்பணி

26th May 2021 03:53 PM

ADVERTISEMENT

 

வெறும் ஏழு ரூபாய் நன்கொடை தாருங்கள்; பசியால் இருக்கும் ஒருவருக்கு ஒரு வேளை பசியாற்றலாம்' எனச் சொல்லி கரோனா பொது முடக்கக் காலத்தில் ஆதரவற்றோருக்கு உணவளித்து வருகின்றனர் புதுக்கோட்டை இளைஞர்கள்.

'பிரபாகரன் புரட்சி விதைகள்' என்பது அந்த இளைஞர் குழுவின் பெயர். கஜா புயலால் புதுக்கோட்டை மக்கள் பாதிக்கப்பட்டபோதும், கரோனா முதல் அலையின்போது, அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கக் காலத்திலும் வீதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மக்களுக்கு சளைக்காமல் தினமும் உணவு வழங்கியவர்கள் இந்தக் குழுவினர்.

இப்போது இரண்டாம் அலையின் பொது முடக்கக் காலத்தில் புதுக்கோட்டையின் பல்வேறு வீதிகளிலும் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். தக்காளி சாதம், முட்டை ஆகியவற்றுடன் வெயிலுக்கு இதமாக தர்ப்பூசணிப் பழமும் கொடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

முற்பகல் 11 மணிக்கு சமையலைத் தொடங்கி, 12.30 மணிக்கு பொட்டலமிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 12 இளைஞர்கள் தயாராக இருசக்கர வாகனங்களில் வந்து பொட்டலங்களை எடுத்துச் செல்கின்றனர். கோயில்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு பசியாற்றும் பணி ஒன்றரை மணிக்கெல்லாம் நிறைவடைகிறது.

இந்தப் பணிக்காக இவர்கள் திரட்டும் நிதிதான் இங்கே சுவாரஸ்யம். வெறும் 7 ரூபாய் கொடுங்கள், ஒருவரின் பசியாற்றலாம் என்பதுதான் அந்த முழக்கம். முகநூலில் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார் பிரபாகரன் புரட்சி விதைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எடிசன்.

உதவி செய்வதற்கு தயாராக இருக்கும் பலரும் அந்தளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்றுதான் சொல்வார்கள். எனவே கொஞ்சம் கொடுத்தும் நல்ல உதவியைச் செய்யலாம் என்பதுதான் இத்திட்டம். நிறைய பேர் முன்வந்து பணம் அனுப்புகிறார்கள். நாங்களே சமைக்கிறோம், விநியோகிக்கிறோம் என்பதால் பெரிய செலவில்லை என்கிறார் எடிசன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT