தமிழ்நாடு

பொதுமக்களைக் காக்க களமிறங்கிய வடுகப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் 

20th May 2021 03:24 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி மன்றத்தலைவர் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி பொதுமக்கள் அவரவர்கள் வீட்டிலேயே உள்ளடங்கி இருக்க வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் வியாழக்கிழமை அறிவுறுத்தினார். மேலும் ஊராட்சியின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டன.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியில் வடுகப்பட்டி, தாதவராயன்குட்டை, காஞ்சாம்புதூர், தட்டாப்பட்டி, சென்னக்கல்கரட்டுப்புதூர், வேப்பம்பட்டி, பாப்பநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. வடுகப்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. சுகாதார நிலையத்திற்கு சங்ககிரி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கரோனா பரிசோதனைக்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

சங்ககிரி வைகுந்தம், சேலம் பகுதிகளிலிருந்து திருச்செங்கோடு செல்லும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் காவல்துறை கண்காணிப்பை மீறி வடுகப்பட்டி வழியாக சென்று வருகின்றன. அதனையடுத்து அப்பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வடுகப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கிருமி நாசினிகள், பிளீச்சிங்க பவுடரை தெளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் வடுகப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை காக்க இரு சக்கர வாகனத்தில் இரு ஒலிபெருக்கிகளை கட்டிக்கொண்டு குரல் வடிவில் பதிவு செய்யப்பட்ட வாசகங்களை பொதுமக்கள் அறியும் வகையில் ஒலி பரப்பு செய்து கொண்டே சென்றார்.

அதில், 'வடுகப்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். கரோனோ தொற்றின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் கரோனோ பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நமது வடுகப்பட்டி ஊராட்சியில் கரோனோ தொற்று வேகமாக பரவி வருகிறது. நமது ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்டோர் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, ஊராட்சியில் உள்ள மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே திறக்க வேண்டும். மற்ற நேரங்களில் திறப்பதை தவிர்க்க வேண்டும். இதர கடைகளை திறந்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் இளைஞர்கள் திறந்தவெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் தேவை இல்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த அறிவிப்புக்கு உட்பட்டு நடக்க வேண்டும். நமது வடுகப்பட்டி ஊராட்சியில் கரோனோ இல்லாத ஊராட்சியாக மாற்ற ஊர் பொதுமக்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.  ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்களை பாதுகாக்க செயல்பட்டு வரும்  ஊராட்சி மன்றத்தலைவரின் செயலை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT