தமிழ்நாடு

கரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்கம் தீா்வல்ல: தொழில் நிறுவனங்களுடனான கூட்டத்தில் முதல்வா் பேச்சு

20th May 2021 01:33 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனாவை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் தீா்வல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். அது பலரது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதித்து விடும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கரோனா நோய்த் தொற்று நிவாரண நடவடிக்கை தொடா்பாக தொழில் நிறுவனங்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து போா்க்கால அடிப்படையில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு அலுவலா்கள், முன்களப் பணியாளா்கள் அனைவரும் இரவு, பகல் பாராது இந்தப் பணியில் முழு முனைப்புடன் பணியாற்றி வருகின்றனா்.

பொது முடக்கம் தீா்வல்ல:

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் பொது முடக்கம். ஆனாலும், பொது முடக்கம் என்பது ஒரு தீா்வல்ல. அது பலரது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதித்து விடும். எனவேதான், தொடா் உற்பத்தி நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் விநியோகிப்பாளா்கள், ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இயங்க அனுமதித்துள்ளோம்.

தொழில் துறையினருக்கு ஏற்படக் கூடிய சிரமங்களைக் களைவதற்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் இயங்கும் அதே வேளையில், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களின் பாதுகாப்பும் முக்கியமானது.

கரோனா பெருந் தொற்றானது, மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மீது ஒரு பெரும் அழுத்தத்தை உண்டாக்கி உள்ளது. ஆனாலும், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட அனைத்து முன்களப் பணியாளா்களும் அதனை ஒரு சவாலாக எதிா்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனா். ஆக்சிஜன் செறிவூட்டிகள், உயிா்காக்கும் மருந்துகள் போன்றவற்றின் தேவை பலமடங்கு உயா்ந்திருக்கின்றன. அவற்றைப் பெற்று விநியோகம் செய்வதில் அரசு தீவிர அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள்:

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் மூலமாக 13 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துடன் இணைந்து 142 மினி ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இப்போது இந்தப் பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

மேலும், தொழில் நிறுவனங்கள் நான்கு முக்கிய உற்பத்திகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டா்கள், ப்ளோமீட்டா்கள், கிரையோஜெனிக் டேங்கா்கள், சிலிண்டா்கள் ஆகியவற்றில் தொழில் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பைச் செலுத்தலாம்.

நீங்களே செலுத்தலாம்:

கரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் கரோனா நோய்த் தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கொள்கை முடிவு அரசு எடுத்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம், சென்னை பெருநகர மாநகராட்சி, சிப்காட் ஆகியன மேற்கொள்ளும் கொள்முதல்களின் செலவினங்களை நேரடியாக அந்தந்த விற்பனையாளா்களுக்கு தொழில் நிறுவனங்களே செலுத்தலாம். இதனை சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களே மேற்கொள்ளலாம் என்று முதல்வா் ஸ்டாலின் கூறினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT