தமிழ்நாடு

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கி.ரா. உடல் தகனம்

DIN

கோவில்பட்டி: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாராயணன் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியையடுத்த இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் கி.ராஜநாராயணன் (99). இவர் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைப் பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.

இறந்த எழுத்தாளர் கி.ரா உடலுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடலை கி.ராவின் மகன்களான திவாகரன், பிரபி என்ற பிரபாகரன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

எழுத்தாளர் கி.ராவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் கனிமொழி எம்.பி. 

அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு இடைசெவல் கிராமத்திற்கு வந்தடைந்தது. அதையடுத்து அவரது உடல் அவரது வீட்டு வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ எல்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

எழுத்தாளர் கி.ராவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு. 

உடல் தகனம்:

இந்நிலையில் மறைந்த கி.ராஜநாராயணனின் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக அதே பகுதியில் அவரது சொந்த தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அரசு சார்பில் தூத்துக்குடி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீஸார் 30 குண்டுகள் முழங்கச் செய்து மரியாதை செலுத்தினர்.

எழுத்தாளர் கி.ராவின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸார்.

அங்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கனிமொழி, வெங்கடேசன், தமிழக அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சதன் திருமலைகுமார், ரகுராமன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, மதிமுக முக்கிய நிர்வாகியான துரை வைகோ, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, சிபிஎம் நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த வாசகர் சங்கர் என்ற புதுச்சேரி இளவேனில், இடைசெவல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள், திமுக உள்பட அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கி.ராவின் சிலைக்கு அவரது மகன்கள் திவாகரன், பிரபி என்ற பிரபாகரன் ஆகியோர் தீ மூட்டினர். முன்னதாக மறைந்த எழுத்தாளர் கி.ராவின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சல் செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT