தமிழ்நாடு

பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்

19th May 2021 02:14 PM

ADVERTISEMENT

 

திருப்பூர்: திருப்பூரில் பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கும் பின்னலாடை நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள ஏஐடியூசி பனியன் தொழிற்சங்க அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு ஏஐடியூசி பனியன் சங்க பொருளாளர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். 

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 -ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் பொதுமுடக்க விதிகளை பொருட்படுத்தாமல் செயல்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பேரில் சங்க நிர்வாகிகளும் பொதுமுடக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர்.

இதன் பிறகும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

இந்தக்கூட்டத்தில் ஏஐடியூசி பனியன் சங்க பொதுச்செயலாளர் என்.சேகர், சிஐடியூ பனியன் சங்க பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, சிஐடியூ பனியன் சங்க பொருளாளர் ராமகிருஷ்ணன், எல்பிஎஃப் சங்கச் செயலாளர் மனோகர், எம்எல்எஃப் செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT