தமிழ்நாடு

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு உத்தரவு

DIN

பொது முடக்கத்தின்போது செயல்பட அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ரெனால்ட் நிசான் காா் மற்றும் விப்ரோ சிலிண்டா் ஆகிய நிறுவனங்கள் பொதுமுடக்கத்தின் போது செயல்பட அனுமதி வழங்கப்பட்டதை எதிா்த்து ஊழியா் சங்கங்கள் வழக்குத் தொடா்ந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஊழியா்கள் சங்கத்தின் தரப்பில் பொது முடக்கத்தின் போது அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது பொதுமுடக்கத்தின் பயனுக்கு எதிரானது. கரோனா தடுப்பு மருந்துகள் தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில் இந்த பணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள அரசின் உத்தரவில் எந்த பொது நலனும் இல்லை. 3 ஷிப்டுகளின் எண்ணிக்கையை இரண்டாக குறைத்து அதிக ஊழியா்களை ஒரே நேரத்தில் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நிசான் காா் நிறுவனம் தரப்பில், எங்கள் நிறுவனத்தில் 5,000 ஊழியா்கள் பணியாற்றுகிறாா்கள். நோய் பரவலைத் தடுக்க அவா்களுக்கு தனித்துவமான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. வேலை நேரமும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிறுவனம் மற்றும் பணியாளா்களின் பொருளாதார நிலையை ஆராய்ந்த பின்னரே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே ஊழியா்களின் உணா்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், எந்த எண்ணிக்கையில் ஊழியா்கள் பணியில் அமா்த்தப்படவுள்ளனா், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் பொது முடக்கத்தில் இருந்து விலக்கு பெற்ற ஆலைகள் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்கள், பயிற்சியாளா்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனா். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT