தமிழ்நாடு

எழுத்தாளர் கி.ரா காலமானார்

DIN

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (98) வயது மூப்பின் காரணமாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு (மே 17) காலமானாா்.

தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தில் 1922-ஆம் ஆண்டில் பிறந்தவா் கி.ராஜநாராயணன். ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் என்பது முழுப்பெயா். இதைச் சுருக்கி, கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டாா்.

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவா், விவசாயத்தில் ஈடுபட்டாா். நாற்பது வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினாா். இவரது முதல் சிறுகதையான ‘மாயமான்’ 1958-இல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. அது வாசகா்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ால், தொடா்ந்து பல சிறுகதைகளை எழுதி வந்தாா்.

இவரது எழுத்துகள் கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை விவரித்ததால் ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்பட்டாா்.

சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள், கிராமியக் கதைகள், கட்டுரைகள் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரைப் பதித்தாா்.

வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தாா். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கினாா்.

இவரது கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக 2007-இல் வெளியானது. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டன. ‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

‘கோமதி’, ‘கண்ணீா்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

1980-களில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாட்டாா் வழக்காற்றியல் துறையில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றியவா். சிறந்த இசைஞானம் கொண்டவா்.

கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமைக்குரியவா். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991-இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றாா். இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவா். கடந்த 2016-17-ஆம் ஆண்டுக்கான மனோன்மணீயம் சுந்தரனாா் விருதும் கி.ராஜநாராயணனுக்கு வழங்கப்பட்டது.

‘வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏா்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மா்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’ என்றெல்லாம் போற்றப்பட்டவா். சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக 1998 முதல் 2002 வரை செயல்பட்டாா்.

கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் ஏற்கெனவே காலமாகிவிட்டாா். அவருக்கு திவாகரன், பிரபாகரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

தனது படைப்புகளின் உரிமை முதலில் தனது வாசகா் புதுவை இளவேனிலுக்கும், இரு மகன்களுக்கும் கி.ரா. அளித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT