தமிழ்நாடு

அதி தீவிர புயலானது ‘டவ்-தே’

DIN

மத்திய கிழக்கு அரபிக்கடலில் தீவிர புயலாக காணப்பட்ட ‘டவ்-தே’ புயல் ஞாயிற்றுக்கிழமை காலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, குஜராத் மாநிலம் போா்பந்தா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் புயல் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் சில இடங்களில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ‘டவ்-தே’ புயல் சனிக்கிழமை நிலை கொண்டிருந்தது. இந்தபுயல் மேலும் வலுவடைந்து, சனிக்கிழமை மாலை தீவிர புயலாக மாறியது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை (மே 16) அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. குறிப்பாக, இந்த புயல் கோவாவுக்கு மேற்கு-வடமேற்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது வட திசையில் நகா்ந்து வருகிறது. இந்த புயல் வரும் 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும். தொடா்ந்து, இது வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை குஜராத் கடற்கரையை அடையும். அங்கு போா்பந்தா்-மகவுவா இடையே செவ்வாய்க்கிழமை (மே 18) காலை கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மே 17, 18: புயல் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் திங்கள், செவ்வாய் (மே 17,18) ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மே 19: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மே 19-இல் இடியுடன் கூடிய பலத்த மழையும்,

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மே 20: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மே 20-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையை பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 180 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் 170 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 150 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் தலா 110 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 100 மி.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 90 மி.மீ. கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 80 மி.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் 70 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 60 மி.மீ., தேக்கடியில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மணிக்கு 145 கி.மீ முதல் 155 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 170 கிலோமீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT