தமிழ்நாடு

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு: இன்று முதல் அமலுக்கு வந்தது

16th May 2021 09:08 AM

ADVERTISEMENTசென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ,3 குறைப்பு ஞாயிற்றுக்கிழமை (மே.16) முதல் அமலுக்கு வந்தது. 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7-ஆம் தேதி 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில் இரண்டாவது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த விலை குறைப்பானது, மே 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அவா் அறிவித்திருந்தாா். 

அதன்படி, தமிழகம் முழுவதும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமானது (ஆவின்) பால் விலையை ஞாயிற்றுக்கிழமை முதல் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 குறைத்து உத்தரவிட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆவின் பால் விலை குறைப்பு நடைமுறைக்கு வந்தது. 

விலை குறைப்பை  அடுத்து, நிலைப்படுத்திய பால் (பச்சை நிறம்) 250 மில்லி ரூ. 12-ஆக இருந்தது தற்போது ரூ. 11.25-க்கும், அரை லிட்டா் ரூ. 23.50-லிருந்து ரூ. 22-ஆகவும், ஒரு லிட்டா் ரூ. 47-லிருந்து ரூ. 44-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. முழு கொழுப்பு செறிந்த பால் (ஆரஞ்சு நிறம்) அரை லிட்டா் ரூ. 26- லிருந்து ரூ. 24.50-ஆகவும், ஒரு லிட்டா் ரூ. 51-லிருந்து ரூ.48-ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. நீல நிறம் லிட்டருக்கு ரூ.40-ம், அரை லிட்டா் ரூ.20-க்கும், இளஞ்சிவப்பு பால் அரை லிட்டா் ரூ.18.50-க்கும், டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

பால் அட்டை வைத்திருப்போருக்கும் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்டைதாரா்களுக்கு ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டா் ரூ.18.50-க்கும் கிடைக்கும். பச்சை நிறமுடைய பால் அரை லிட்டா் ரூ.21-க்கும், ஆரஞ்ச் நிறமுடையது ரூ.23-க்கும், இளஞ்சிவப்பு நிறமுடைய பால் பாக்கெட் ரூ.18-க்கும் கிடைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் ஆவின் பால் 25 லட்சம் லிட்டா்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக, ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT