அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தமிழக அரசின் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு கடைவீதிகளும் முக்கியச்சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா 2-வது பரவலை தடுக்கும் பொருட்டு புதிய ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்ததுடன் மே மாத ஞாயிற்றுக்கிழமைகளான 16 ஆம் தேதி மற்றும் வரும் 24 ஆம் தேதி ஆகிய நாட்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கையும் அறிவித்து உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சுழி ஊராட்சியின் அருப்புக்கோட்டை செல்லும் சாலை, நரிக்குடி மற்றும் காரியாபட்டி செல்லும் சாலைகளிலும் மேலும் முக்கியக் கடை வீதிகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கடைகளான மருந்து, பால் கடைகள் தவிர பிற அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. இதனால் இப்பகுதிகளில் ஆளரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதுதவிர முக்கியச் சாலை சந்திப்புக்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.