தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்: ககன்தீப் சிங் பேடி

14th May 2021 08:58 PM

ADVERTISEMENT

அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு தடுப்பு ஊசியே சிறந்த ஆயுதம் ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கு அரசின் வழிகாட்டுதளின்படி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 14,55,718 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 11,42,447 நபர்களுக்கும் இரண்டாவது தவணையாக 5,06,277 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இவை இரண்டுமே ஒரே மாதிரியான பயன் அளிக்க கூடியவை. பொதுமக்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல் நோயினால் ஏற்படும் தாக்கமும் குறைவாக இருக்கும். 

கரோனா வைரஸ் தொற்றிற்கான தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களிடையே ஆரம்பநாட்களில் காணப்பட்ட ஆர்வம் தற்போது குறைந்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் 1.00 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதற்காக 152 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் உடனடியாக ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வீடு வீடாக சென்று காய்ச்சல் போன்ற தொற்று அறிகுறி உள்ளதா என களப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 45 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவரிடமும் தடுப்பூசி போடப்பட்ட தகவல்கள் பெறப்படும். இந்த தகவல்களின் அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்றவாறு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். 

மக்கள் அதிகம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். தற்சமயம் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் பெருநகர சென்னை மாநகாரட்சியில் உள்ளன. மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலமாக தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு விலையில்லாமல் வழங்கும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார். 
 

Tags : coronavaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT