தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்

14th May 2021 03:48 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி வியாழக்கிழமை தொடங்கி நிலையில், முதல்கட்டமாக 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அதன்பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் கண்காணிப்புக் குழுவினா் 2 முறை ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.

இதையடுத்து, ஆலையின் ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவில் ஏற்கெனவே பணியிலிருந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுவந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலையில் புதன்கிழமை இரவில் ஆக்சிஜன் உற்பத்தி முழுமையாக தொடங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், ஆய்வுக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அது 98 சதவீதம் சுத்தமானதாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வியாழக்கிழமை காலை லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இப்பணியை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். அப்போது, ஆலையின் தலைமை செயல் அலுவலா் பங்கஜ்குமாா், அரசு அதிகாரிகள், ஸ்டொ்லைட் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஸ்டொ்லைட் ஆலையில் முதல் கட்டமாக உற்பத்திசெய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, உற்பத்தி அளவை அதிகரிக்க உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டு ஏற்ற வகையில் 98 சதவீதம் சுத்தமானதாக இருப்பதை நிபுணா்கள் குழுவினா் உறுதிப்படுத்தியுள்ளனா். இங்கு உற்பத்தியாகும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தமிழகத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT