தமிழ்நாடு

நோயாளிகள் உயிருடன் விளையாட வேண்டாம்: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

DIN


சென்னை: தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு  அனுப்பி அவர்கள் உயிரோடு விளையாட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.

சென்னை, கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்புக் கவச உடை அணிந்து நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.

ஷெனாய் நகர் ஹண்டே மருத்துவமனையில் ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 40 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை அவர் தொடக்கி வைத்தார்.

பின்னர், ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 30 கோடி மதிப்பில் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு அமைக்கப்பட்டுள்ள 140 ஆக்சிஜன் படுக்கைகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

தனியார் மருத்துவமனைகளைப் பொருத்தவரை சில இடங்களில் லேசான பாதிப்பு உள்ளவர்களை அனுமதித்து சிகிச்சையளிக்கின்றனர். குறிப்பாக, காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைக்கு சிகிச்சை வழங்குகிறார்கள். அதேவேளையில் நோயாளிகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் வரும்போது, அதற்கான ஆக்சிஜன் வசதி இல்லாமல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர். இதன் காரணமாகவே தீவிர பாதிப்புடைய நோயாளிகள் பலர் இடமில்லாமல் மருத்துவமனை வாயில்களில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளும், அடிப்படை மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தி கொள்வது அவசியம். இதுபோன்ற சம்பவங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும். அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் குறை கூறவில்லை. குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்த கரோனா காலத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசுக்கு உதவ முன் வருகின்றன. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசிடமிருந்து 419 டன் ஆக்சிஜன் வருகிறது. அது போதுமானதாக இல்லை. கூடுதலாக, 100 டன் ஆக்சிஜன் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் தன்னார்வ அமைப்பு சார்பில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசிடம், 1,300-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன வசதி உள்ளது. இதில், 450 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கரோனா  நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், 2,000  தனியார் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தனியார் வாகனங்களுக்கு, தினசரி, 50 லிட்டர் எரிவாயு, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

சென்னையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 12 இடங்களில் சித்தா சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT