தமிழ்நாடு

மூச்சுத் திணறும் தமிழகம்!

ஆ. கோபிகிருஷ்ணா

சென்னை: தமிழகம் முழுவதும் பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள பிராண வாயுவை நம்பி உயிர் பிழைக்க வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளுக்குள் இடம் கிடைக்காததால்  வேறு வழியின்றி 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அழைத்து அதற்குள்ளேயே நாள்கணக்கில் தங்கி முதலுதவி சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக நோயாளிகள் பலர் தெரிவிக்கின்றனர். பல மருத்துவமனைகளில் வயதானவர்களுக்கும், இணை நோய் தீவிரமாக உள்ளவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் உடனடியாக பிராணவாயு வசதியுடன் கூடிய மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய தலையாய தேவையாக மாறியுள்ளது. தமிழகத்தில் அதி தீவிரமாகப் பரவி வரும் கரோனா தொற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளிலும் சரி; தனியார் மருத்துவமனைகளிலும் சரி, போதிய படுக்கை வசதிகள் இல்லை.
சொல்லப்போனால், அவசரத் தேவைக்காக பல இடங்களில் கட்டில்களை மட்டும் அமைத்து படுக்கை வசதி என கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், அங்கு உயிர் காக்கும் பிராண வாயு வசதிகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை.
தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் 1.72 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேருக்கு (சுமார் 52 ஆயிரம் பேர்) பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அவசியம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மொத்த பிராணவாயு படுக்கைகளே 34,648 என்பதுதான். இதனால், பிராணவாயு படுக்கைகளுக்காக மருத்துவமனை வழி நெடுக ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அவசரத் தேவைக்கு பிராணவாயு கிடைப்பதில்லை என்பதால் பலர் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அழைக்கின்றனர். அதில் உள்ள பிராணவாயுவைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காத்துக் கொள்ள ஒவ்வொரு மருத்துவமனையாக அலைகின்றனர். மருத்துவமனை வாயில்களில் நாள்கணக்காக அணிவகுத்து நிற்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள நோயாளிகள், அதில் உள்ள பிராணவாயு தீரத் தீர உயிரை விடுகின்றனர் என்பதுதான் உச்சத்திலும் உச்சமான அவலம். இதனால், மருத்துவமனைக்குள் மட்டுமல்லாது மருத்துவமனைக்குச் செல்லும் வழி நெடுக மரண ஓலம் கேட்கிறது.
அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட முதன்மை மருத்துவமனைகளில் மட்டுமே ஓரளவு பிராணவாயு வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. மற்ற இடங்கள் அனைத்திலும் சாதாரண படுக்கைகளே உள்ளன.
தனியார் மருத்துவமனைகளைப் பொருத்தவரை 90 சதவீத  படுக்கைகளில் பிராணவாயு வசதிகள் உள்ளன. ஆனால், அதற்குத் தேவையான பிராணவாயுதான் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால், பல தனியார் மருத்துவமனைகள் மிதமான பாதிப்புடைய நோயாளிகளை மட்டுமே அனுமதிக்கின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், தீவிர பாதிப்புடையவர்களுக்கும் சிகிச்சையளிக்க வெளிப்படையாகவே மறுப்புத் தெரிவிக்கின்றனர் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள். தானாகவே குணமாகும் ஆற்றல் கொண்ட இளைஞர்களுக்கும், இணை நோய் இல்லாதவர்களுக்கும் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் எதற்கு என்பதுதான் தற்போது பரவலாக முன்வைக்கப்படும் கேள்வியாக உள்ளது.
அதுமட்டுமல்லாது அவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் உள்ளவர்களை அனுமதித்து பல லட்ச ரூபாய் கட்டணமாய் வசூலித்து கொள்ளை லாபம் ஈட்டி வருவதாகவும் தனியார் மருத்துவமனைகளின் மேல் குற்றச்சாட்டு உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என அரசு அறிவித்தது. அதை நம்பி மருத்துவமனைகளை நாடிய மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியே காத்திருந்தது.
அதாவது,  பல தனியார் மருத்துவமனைகளில் குறைந்த பாதிப்புடைய கரோனா நோயாளிகளுக்கே ரூ.3 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பிராணவாயு தேவை உடையவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு ரூ.10 லட்சம் வரை கூட கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், அவை அனைத்தையும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெற முடியாது.
தமிழக அரசானது தனியார் மருத்துவமனைகளின் கரோனா சிகிச்சைக்கான கட்டண வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி, குறைந்த மற்றும் மிதமான பாதிப்புடைய நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே கட்டண வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கணக்கிட்டால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் ஒரு வாரம் ஒரு நோயாளி இருந்தாலும்கூட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே பெற முடிகிறது. ஒருபுறம் பிராணவாயுவைத் தேடி அலையும் மக்கள், மற்றொரு புறம் கட்டணக் கொள்ளையால் கொழிக்கும் தனியார் மருத்துவமனைகள் என தமிழகத்தின் சுகாதார நிலை சரித்திரம் சந்தித்திராத பேரிடரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

"சில நாள்களில் பிரச்னை தீரும்!'

தமிழகத்தில் அடுத்த சில நாள்களில் இத்தகைய இக்கட்டான சூழலுக்கு தீர்வு கிடைக்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதற்கேற்ற வகையில் சிகிச்சை முறைகளை மாற்றியமைத்து வருகிறோம். அதன்படி, பிராணவாயு தேவை உள்ளவர்களை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கிறோம். தற்போதைய சூழலில் தமிழகத்தில் பிராணவாயு படுக்கைகள் மற்றும் பிராணவாயு உற்பத்தி ஆகிய இரண்டையுமே விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பிராணவாயு வசதியுடன் கூடிய 12,500 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT