தமிழ்நாடு

ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர்: முதல்வர் ஸ்டாலின்

DIN

ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக நடத்தப்படும் இந்த அனைத்து சட்டமன்ற கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எனது அழைப்பினை ஏற்று வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று நான் ஏற்கனவே கொடுத்துள்ள வாக்குறுதியின்படி - நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் எடுக்கப்பட்டுவரும் கரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து, உங்கள் அனைவருக்கும் விளக்கி, உங்களது ஆலோசனைகளைப் பெறவே இந்த கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இந்த அரசு பொறுப்பேற்கும் நாளுக்கு முன்பாகவே நோய்த் தொற்றின் தாக்கத்தையும் வேகத்தையும் உணர்ந்து, அதனை எதிர்கொள்வது தொடர்பான அலுவலர்களின் கருத்துக்களை அறிந்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வந்தேன்.

முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அவற்றில், நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் துயர் தீர்க்க, அரிசி அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்பொருட்டு, அதனை இரண்டு தவணையாக வழங்கும் முக்கிய அரசாணை வெளியிடப்பட்டு, நிவாரணம் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதோடு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி, அவர்களின் இன்னல்களைக் குறைக்கும் வகையில், சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்பதற்கும் மக்கள் நலன் கருதி இந்த அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அன்று மாலையே தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு முக்கிய முடிவுகளை இந்த அரசு எடுத்தது. அன்றே மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாகவும் ஆலோசனை செய்தேன்.

தொடர்ச்சியாக வந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் நோய் பரவல் பற்றியும் மருந்து மற்றும் தடுப்பூசிகள் இருப்பு பற்றிய விபரங்களை அறிந்து உரிய முடிவுகளை இந்த அரசு எடுத்து வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களில் இதுதொடர்பாக அரசு மேற்கொண்ட சில முக்கிய நடவடிக்கைகளை பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தேவையான இடவசதி ஆக்சிஜன் இருப்பு ஆம்புலன்ஸ் தேவை போன்றவற்றை தனித்தனியே முறையாக ஒருங்கிணைத்து இரவு பகல் பாராது கண்காணித்து மக்களுக்கு சேவை வழங்க ஒரு கட்டளை மையம் துவக்கப்பட்டது.
2. ஆக்சிஜன் இருப்பை கண்காணிக்கவும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதை உறுதி செய்யவும் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் பெறுவதை ஒருங்கிணைக்கவும் தொழில்துறை முதன்மைச்
3 செயலாளர் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு இயங்கி வருகிறது
3. கரோனா நோய்த் தொற்றினைக் குணப்படுத்தும் அரும்பணியில் தங்களை &டவ;டுபடுத்திக் கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையும், இப்பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த மருத்துவப் பணியாளர்களுக்கு இழப்பீடும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,
கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் - ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ஊக்கத் தொகையாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
4. தடுப்பூசியினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் செய்து வருகிறது.
5. ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு இது குறித்து அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு அதில் பலனும் கிடைத்துள்ளது. இருப்பினும் பெருகிவரும் தேவையைக் கருத்தில்கொண்டு, ஆக்ஸிஜன் இருப்பை மேலும் அதிகரிக்கவும் இந்த அரசு வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் விபரங்களை ஓரிரு தினங்களில் நான் அறிவிக்க இருக்கிறேன்.
6. ரெம்டெசிவிர் மருந்து சென்னை மட்டுமல்லாமல் பல நோயாளிகளுக்கு மாநிலம் முழுவதும் தேவைப்படுவதால், முக்கிய நகரங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
7. பொது மக்களில் பலருக்கு ஆயுர்வேதா சித்தா மற்றும் யுனானி போன்ற மருத்துவ சிகிச்சை வகைகள் நம்பிக்கையும் பலருக்கு பலனும் கிட்டுவதாக தெரிவிக்கப்படுவதால் தாம்பரத்தில் இதற்கென தனி சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது அதனை நான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் துவக்கி வைத்தேன்.
8. அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக, சிங்கப்பூர், தாய்வான் போன்ற வெளிநாடுகளில் இருந்து அரசு மூலமாகவும், தொழில் நிறுவனங்கள் மற்றும் கொடையாளர்கள் மூலமாகவும், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.
9. தற்போதைய நோய்த்தொற்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவிலான மக்களைப் பாதித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் தேவையும் உயர்ந்து வருகிறது இதனை எதிர்நோக்கி, கூடுதல் எண்ணிக்கையிலான புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் புதிதாக படுக்கைகள் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
10. நோய்த் தொற்றுக்கான சோதனை முடிவுகளை விரைந்து மக்களுக்கு தெரிவிக்கவும் சோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் தனியார் பரிசோதனை மையங்களும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை முறையாக நிர்ணயம் செய்யவும் விலை நிர்ணயக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்தவும் நேற்று ஆணையிட்டுள்ளேன்.
11. கரோனா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த அமைப்புகள் உடனான ஆலோசனை கூட்டம் கடந்த 9-5-2021 அன்று நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சலுகைகளை இந்த அரசு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இதனால் தொழில் வர்த்தகம் பாதுகாக்கப்பட்டு பொருளாதாரம் நிலைத் தன்மை பெற்று இருப்பது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை இந்த குறுகிய சில நாட்களில் இந்த அரசு எடுத்து வருகிறது. பெருகி வரும் கரோனா பெருந்தொற்றிலிருந்து, முழு வீச்சில் - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து- நம் மக்களைப் பாதுகாத்திட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறைந்த அளவு பாதிப்புடன், இறப்புகளை பெருமளவில் தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தளர்வுகளைப் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்க படலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே அமர்ந்திருக்கும் அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள். அனைவரும் இணைந்து நம் மக்களை காப்பாற்றிடத் தேவையான ஆலோசனைகள், கருத்துக்கள்- உங்கள் தொகுதியிலிருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT