தமிழ்நாடு

ஸ்டாலின் முதல் ஸ்டாலின் குமார் வரை

DIN

முதலில் மு.க.ஸ்டாலினும் இறுதியாக ஸ்டாலின் குமாரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற சுவாரஸ்யம் நடைபெற்றது.
 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் நடைபெற்ற சில துளிகள்:
 புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக - அதிமுக கூட்டணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிப் பாகுபாடு இல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் வணக்கம் தெரிவித்துச் சென்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களும் பதில் வணக்கம் தெரிவித்தனர். இது ஆரோக்கியமானதாக இருந்தது.
 சட்டப்பேரவையில் அமைதி - வளம்- வளர்ச்சி என்கிற வாசகத்துடன் கூடிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் அமைந்திருக்கும் வரிசையில் பக்கம் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அமர்வது நடைமுறை. அதில் சிறிதும் மாற்றம் செய்யாமல் ஜெயலலிதாவின் படம் இருந்த வரிசையின் பக்கமாகவே முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
 எதிர்க்கட்சித் தலைவர்கள் பக்கத்தின் முதல்வரிசையில் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சிந்தனைச் செல்வன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
 திமுக உறுப்பினர்கள் சிலர் பதவியேற்கச் செல்வதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றனர். அதைப்போல, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது மேஜையைத் தட்டி வாழ்த்துத் தெரிவித்ததுபோல உதயநிதி பதவியேற்றபோதும் திமுக உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 இரண்டாவது முறையாக உதகை தொகுதியில் இருந்து வெற்றிபெற்று வந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கணேஷ் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பாரம்பரிய உடையுடன் வந்து பதவியேற்றுக்கொண்டார்.
 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு) கடவுளறிய என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, வளர்க தமிழ், வந்தே மாதரம் என்றார். திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் தீரன் சின்னமலையை வணங்குவோம் என்றார்.
 சட்டப்பேரவையில் செல்லிடப்பேசியை உபயோகிக்கக் கூடாது என்பது விதி. புதிய உறுப்பினர்கள் பலருக்கு அந்த விதி தெரியவில்லை. சிலர் பேரவையில் சுயபடம் எடுத்துக் கொண்டனர். மூன்றாவது முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அவைக்குள் இருந்து பேசியது சர்ச்சையாகி உள்ளது.
 பேரவை நடைபெறும்போது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு ஓய்வு அறை ஒதுக்கப்படுவது நடைமுறை. அவசர நிகழ்வால் அப்படி அறை ஒதுக்கப்படவில்லை. அதைப்போல உறுப்பினர் அனைவரும் பதவியேற்கும் வரை யாரும் வெளியில் செல்லாமல் அமைதியாக அவைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் தற்காலிக பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி உத்தரவிட்டிருந்தார். அதனால், யாரும் வெளியில் செல்லாமல் உள்ளேயே உட்கார்ந்திருந்தனர்.
 கரோனா தடுப்பு விதிகள் பேரவையில் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. ஓரிரு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்ததும் ஒலிபெருக்கி உள்பட மேஜையில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. அதைப்போல உறுப்பினர்களுக்கும் அவ்வப்போது கையைச் சுத்தம் செய்துகொள்ள கிருமிநாசினி கொடுக்கப்பட்டது.
 முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்) பதவியேற்றுக்கொண்டார். மொத்தம் 223 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இறுதியாக திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் குமார் (துறையூர்) பதவியேற்றார். அதை மூத்த உறுப்பினரான துரைமுருகன் பேரவையில் இருந்தவர்களிடம் "ஸ்டாலினில் தொடங்கி, ஸ்டாலின் குமாரில் முடிவடைகிறது' என்றார்.
 திமுக உளமார - அதிமுக கடவுளறிய உறுதிமொழி
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உளமார என்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடவுளறிய என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
 புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 223 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். பதவி பிரமாணத்தை உளமார என்று கூறி உறுதி எடுத்துக் கொண்டார். அவரைப் பின்பற்றி திமுக உறுப்பினர்கள் அனைவரும் உளமார உறுதியளித்தனர்.
 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடவுளறிய என்று கூறி உறுதி எடுத்துக் கொண்டார். அவரைப் பின்பற்றி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக உறுப்பினர்களும் கடவுளறிய என்று கூறி எடுத்துக் கொண்டனர்.
 காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடவுளறிய என்றும் சிலர் உளமார என்றும் எடுத்துக் கொண்டனர்.
 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் கடவுளறிய என்று கூறி உறுதி எடுத்துக் கொண்டனர்.
 பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட அக்கட்சியின் 5 உறுப்பினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலா 2 உறுப்பினர்களும் உளமார என்று கூறி உறுதி எடுத்துக்கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT