தமிழ்நாடு

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கரோனாவால் காலமானார்

12th May 2021 10:43 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் தலைமை புலனாய்வு அதிகாரி கே.ரகோத்தமன்(72) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கே.ரகோத்தமன் (72). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர், கடந்த 1968-ஆம் ஆண்டு சிபிஐயில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். மேலும் அவர், தேசிய போலீஸ் அகாதெமியில் ஒரு ஆண்டு பயிற்சியும் பெற்றார்.

சிபிஐயில் ரகோத்தமன்,வங்கி மோசடி, பொருளாதார குற்ற வழக்குகளையே மட்டும் முதலில் விசாரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 1991-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரையின்போது ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதல் மூலம் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை வழக்கு காரணமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், நளினி, முருகன் என ஏழு பேர் சிறையில் உள்ளனர்.  

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரணை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவில் தலைமை புலனாய்வு அதிகாரியாக கே.ரகோத்தமன் நியமிக்கப்பட்டார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக டி.ஆர்.கார்த்திகேயன் இருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை ரகோத்தமன் 10 ஆண்டுகள் விசாரித்தார். இவ் வழக்கின் நீதிமன்ற விசாரணையின்போது ரகோத்தமன், சாட்சிக் கூண்டில் 67 நாள்கள் நின்று சாட்சியம் அளித்தார். 36 ஆண்டுகள் சிபிஐயில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய ரகோத்தமன், கண்காணிப்பாளராக இருந்தபோது கடந்த 2004-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பணிக்காலத்தில் ரகோத்தமன்,மெச்சத்தகுந்த பணிக்கான விருதும், குடியரசுத் தலைவர் பதக்கமும் பெற்றுள்ளார். 

ஓய்வுக்குப் பின்னர் ரகோத்தமன், சென்னை கே.கே.நகர் 17-ஆவது செக்டாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ஓய்வு காலத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு, “ராஜீவ் கொலை வழக்கு-மர்மம் விலகும் நேரம்” என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். இந்த புத்தகம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராஜீவ் காந்தி கொலை குறித்து ஊடக விவாதங்களில் பங்கேற்று கருத்துக்களை கூறி வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டதால், கே.கே.நகரில் வீட்டில் ரகோத்தமன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரகோத்தமன், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், முகப்பேரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரகோத்தமன், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். 

ரகோத்தமன் உடலை நல்லடக்கம்  செய்வதற்காக, உளுந்தூர்பேட்டையை அடுத்த பாண்டூருக்கு அவரது குடும்பத்தினர் புதன்கிழமை கொண்டுச் சென்றனர்.

Tags : Ragothaman dies
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT