தமிழ்நாடு

கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? - துரைமுருகன் கண்டனம்

12th May 2021 12:40 PM

ADVERTISEMENT


சென்னை: புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், புதுச்சேரி மக்களின் தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது என தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வருகிறாா்.

மாநிலத்தில் தற்போது என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், அமைச்சரவைகூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதுவை சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 3 நியமன உறுப்பினா் பதவிகளுக்கும் அவசரமாக, தன்னிச்சையாக, தனது கட்சியைச் சோ்ந்த மூவரை நியமனம் செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் என்று அரசுயல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், புதுச்சேரி மக்களின் தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்குத் திமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். “30 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டப்பேரவை” எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில் - சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் 33-ஆக உயர்த்தி - மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து பாஜக.வின் எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது. புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து - கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, ஒன்றிய பாஜக அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு - புதுச்சேரி மக்களின் நலனிலும் - மாநிலத்தில் நிலவும் கரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்திட வேண்டும் என்று துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags : BJP seize power
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT