தமிழ்நாடு

69 சதவீத இடஒதுக்கீடு நிலை நிறுத்தப்படும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

12th May 2021 03:55 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நிலை நிறுத்தப்படும் என்று சட்டத் துறை எஸ்.ரகுபதி உறுதிபடத் தெரிவித்தார்.
 மராத்திய இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்துக்குப் பிறகு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:-
 இந்திரா சகானி தீர்ப்பு அடிப்படையிலேயே மராத்திய இடஒதுக்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்திரா சகானி வழக்குக்குப் பிறகுதான், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த இடஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டு அரசமைப்புச் சட்டத்தில் உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மேலும் அது 9-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளதுடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
 மராத்திய தீர்ப்பு வெளியான நிலையில், தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசிக்கப்பட்டது. மராத்திய இடஒதுக்கீடு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். இப்போது மராத்திய இடஒதுக்கீடு வழக்கில் 500 பக்கங்களுடன் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்து விட்டு அரசு தலைமை வழக்குரைஞர் உரிய முடிவை முதல்வரிடம் தெரிவிப்பார்.
 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாப்போம். அதுதான் முதல்வரின் நோக்கம். அதனைக் காப்பாற்றுவார். 69 சதவீத இடஒதுக்கீடு நிலை நிறுத்தப்படும். ஏழு பேர் விடுதலை செய்ய வேண்டுமென்பதுதான் எங்களது குறிக்கோள். விரைவில் அதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று ரகுபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT