தமிழ்நாடு

பேரவைத் தலைவராக அப்பாவு பொறுப்பேற்பு: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பேச்சு

12th May 2021 01:26 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் தலைவர் இருக்கையில் உங்களை பார்க்கும்போது நெஞ்சம் பூரிப்படைகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உருக்கமான பேசினார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த 7 -ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  அன்றைய தினமே 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.  

செவ்வாய்கிழமை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து பேரவை கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே, சட்டப்பேரவைத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்பாவு, துணைத் தலைவா் பதவிக்கு கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.பிச்சாண்டி ஆகியோா் பேரவைச் செயலாளா் சீனிவாசனிடம் மனுதாக்கல் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

பேரவைத் தலைவா் பதவிக்குப் போட்டியிட செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால், மு. அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோா் போட்டியின்றித் தோ்வாகினா்.

இதையடுத்து சட்டப்பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.அப்பாவு புதன்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில், அவை முன்னவர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அமர வைத்தனர்.

அதைத் தொடா்ந்து அவை நடவடிக்கைகளைக் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கவனிக்கத் தொடங்கினார். 

இதையடுத்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையின் தலைவர் இருக்கையில் உங்களை பார்க்கும்போது என் நெஞ்சம் பூரிப்படைந்துள்ளது. போட்டியின்றி அவைத்தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. அப்பாவு பேரவை தலைவராக அமர்ந்திருப்பது 16-ஆவது பேரவைக்கு பெருமை தருகிறது.  பேரவையில் பேரவைத்தலைவரின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். ஊடக விவாதங்களில் கருத்தோடும் சுவையோடும் பேசும் உங்களை கவனிப்போரில் நானும் ஒருவன். தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பேரவை தலைவர்களாக இருந்துள்ளனர். சுதந்திரத்தின் அடையாளமான நீங்கள் பேரவையில் அமர்ந்துள்ளீர்கள். அண்ணாவின் தம்பிகளாகிய எங்களுக்கு ஆணவம் இருக்காது கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் அவையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று உருக்கமாக பேசினார்.

இதைத்தொடர்ந்து அவையில் பேசியிய பேரவை தலைவர் அப்பாவு, கட்சி பாகுபாடின்றி பேச அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பேன். சட்டத்தை மதித்து நாகரீகமாக நடந்து கொள்வேன் என்று உறுதியளித்த அப்பாவு, அரசியலில் காலியாக இருந்து வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்ற அப்பாவு கூறினார். 

பேரவை தலைவர் பொறுப்பேற்பு, வாழ்த்துரை முடிந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

Tags : Stalins speech Speaker Appavu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT