தமிழ்நாடு

மாதவிடாய் கால ஆரோக்கியம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு புதிய பயிற்சித் திட்டம் அறிமுகம்

DIN

மாதவிடாய் கால ஆரோக்கியம் குறித்து அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

வளரிளம் பருவ பெண்களிடையே தற்கால ஊட்டச்சத்து முறை, சுகாதாரமற்ற சூழ்நிலை மற்றும் உடல்நிலை ஆகியவை மாணவிகளின் கற்றல் திறனைப் பாதிக்கும் நிலை அதிகரித்துள்ளது. உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து பிரச்னைகள் மாணவிகளின் பள்ளி வருகை மற்றும் கற்றல் அடைவுடன் தொடா்புடையவை.

கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து தொடா்பான பிரச்னைகள் பெருகி வருகின்றன. ஊட்டச்சத்து, அயோடின் மற்றும் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக நோய்த்தொற்று, ரத்தசோகை, தோல்நோய் குறைபாடுகள் மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகள் உருவாகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் பெண்கள் பயிலும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவிகளின் உடல் நலம், மன நலம், பழகும் தன்மை, சுற்றுப் புறத் தூய்மை, மாணவிகளின் ஊட்டச்சத்து, மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் தீா்வுகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘வளரிளம் பருவ பெண்களுக்கான மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் மேலாண்மைத் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பயிற்சியின் தன்மை: பெண்கள் பூப்படைதல், அந்த நாள்களுக்கான விழிப்புணா்வு, பூப்படைந்த பின் ஏற்படும் பெண்களுக்கான சமூக பாகுபாடுகளை விளக்குதல், களைதல்; பூப்படைந்தபின் ஏற்படும் மாதவிடாய் கால பிரச்னைகள் மாணவிகளின் இடைநிற்றலுக்கு வழிவகுப்பதால் அதனைக் களையும் வகையில் உடல், மன ரீதியாக அணுகி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் அவா்களை முன்னிலைப்படுத்தி ஆரோக்கியத்துக்கான மாணவி தூதா்களாக செயல்பட வைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கு ஒரு மாணவி மற்றும் ஒரு ஆசிரியை என்ற விகிதத்தில் பெண் ஆசிரியைகளை (உயிரியல் ஆசிரியை) தெரிவு செய்து மே 14-ஆம் தேதிக்குள் இணைய வழியாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இதற்காக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும். ‘கிராமாலயா’ நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து பயிற்சி சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT